”737 மேக்ஸ் 8” ரக விமானங்களை விநியோகம் செய்வதை நிறுத்தியது போயிங் நிறுவனம்


”737 மேக்ஸ் 8” ரக விமானங்களை விநியோகம் செய்வதை நிறுத்தியது போயிங் நிறுவனம்
x
தினத்தந்தி 15 March 2019 3:35 AM GMT (Updated: 15 March 2019 3:35 AM GMT)

”737 மேக்ஸ் 8” ரக விமானங்களை விநியோகம் செய்வதை போயிங் நிறுவனம் தற்காலிகமாக நிறுத்திவைத்துள்ளது.

வாஷிங்டன்,

அமெரிக்காவை சேர்ந்த பிரபல விமான தயாரிப்பு நிறுவனமான ‘போயிங்’ கடந்த 2017-ம் ஆண்டு ‘போயிங் 737 மேக்ஸ் 8’ ரக பயணிகள் விமானங்களை அறிமுகம் செய்தது.

இந்த ரக விமானம் அறிமுகப்படுத்தப்பட்ட குறுகிய காலத்திலேயே உலக நாடுகளிடம் இருந்து அதிக ஆர்டர்களை பெற்றது. அதன்படி போயிங் நிறுவனம் 100-க்கும் மேற்பட்ட ‘போயிங் 737 மேக்ஸ் 8’ ரக விமானங்களை தயாரித்து வழங்கியது. இந்த சூழலில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 25-ந் தேதி இந்தோனேசியாவின் லயன் ஏர் நிறுவனத்துக்கு சொந்தமான ‘போயிங் 737 மேக்ஸ் 8’ ரக விமானம், புறப்பட்டு சென்ற சில நிமிடங்களில் கடலில் விழுந்து விபத்துக்குள்ளானதில் 189 பேர் உயிர் இழந்தனர்.

அதே போல் எத்தியோப்பியா ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான ‘போயிங் 737 மேக்ஸ் 8’ ரக விமானம் கடந்த 10-ந் தேதி விபத்துக்குள்ளானதில் அதில் பயணித்த 157 பேரும் உயிரிழந்தனர். விமானம் பயன்பாட்டுக்கு வந்த குறுகிய காலத்திலேயே தொடர்ந்து 2 பெரும் விபத்துகளை சந்தித்ததால், ‘போயிங் 737 மேக்ஸ்’ ரக விமானங்களின் பாதுகாப்பு குறித்து கேள்வி எழுந்தது.

இதனால் சீனா, இங்கிலாந்து ஆஸ்திரேலியா உள்ளிட்ட பல நாடுகள் ‘போயிங் 737 மேக்ஸ் 8’ ரக விமானங்களை இயக்க தடை விதித்தன. குறிப்பாக இந்தியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகள் இந்த ரக விமானங்களை இயக்க தடை விதித்ததோடு, தங்களின் வான்பரப்பில் இந்த விமானங்கள் பறக்கவும் தடைபோட்டன.  தடை விதிக்க முகாந்திரம் இல்லை எனக்கூறி வந்த அமெரிக்காவும் போயிங் 737 மேக்ஸ் 8 ரக விமானங்களுக்கு தடை விதித்தது. 

இந்த நிலையில், 737 மேக்ஸ் 8 ரக விமானங்களின் விநியோகம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டு இருப்பதாக போயிங் நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கும் வரை 737 மேக்ஸ் 8 ரக விமானங்கள் யாருக்கும் வழங்கப்படாது என்று தெரிவித்துள்ளது. 


Next Story