உலக செய்திகள்

மெக்சிகோ எல்லைச்சுவர் கட்ட நிதி ஒதுக்கும்டிரம்ப்பின் அவசரநிலை பிரகடனம், செனட் சபையிலும் நிராகரிப்புஅடுத்து என்ன நடக்கும்? + "||" + Trump's Emergency Declaration and Rejection of the Senate

மெக்சிகோ எல்லைச்சுவர் கட்ட நிதி ஒதுக்கும்டிரம்ப்பின் அவசரநிலை பிரகடனம், செனட் சபையிலும் நிராகரிப்புஅடுத்து என்ன நடக்கும்?

மெக்சிகோ எல்லைச்சுவர் கட்ட நிதி ஒதுக்கும்டிரம்ப்பின் அவசரநிலை பிரகடனம், செனட் சபையிலும் நிராகரிப்புஅடுத்து என்ன நடக்கும்?
மெக்சிகோ எல்லைச்சுவர் கட்ட நிதி ஒதுக்கும் வகையில், டிரம்ப் பிரகடனப்படுத்திய அவசர நிலை பிரதிநிதிகள் சபையை தொடர்ந்து, செனட் சபையிலும் நிறைவேறியது.
வாஷிங்டன்,

மெக்சிகோ எல்லையில் பிரமாண்ட எல்லைச்சுவர் எழுப்பும் திட்டத்துக்காக 5.7 பில்லியன் டாலர் (சுமார் ரூ.40 ஆயிரம் கோடி) நிதி ஒதுக்கும்படி அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் நாடாளுமன்றத்தை வலியுறுத்தினார்.

ஆனால் ஜனநாயக கட்சியினர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்ததால் நிதி மசோதாவை நிறைவேற்றுவதில் சிக்கல் எழுந்தது. எனினும் எல்லைச்சுவர் கட்டும் முடிவில் விடாப்பிடியாக இருக்கும் டிரம்ப், அதற்கான நிதியை பெறுவதற்காக கடந்த மாதம் 15-ந் தேதி நாட்டில் அவசர நிலையை பிரகடனப்படுத்தினார்.

பிரநிதிகள் சபை நிராகரிப்பு

இதையடுத்து டிரம்ப் அறிவித்த அவசர நிலை பிரகடனத்தை நிராகரிக்கும் தீர்மானத்தை நாடாளுமன்ற பிரதிநிதிகள் சபையில் ஜனநாயக கட்சியினர் கொண்டுவந்து ஓட்டெடுப்பு நடத்தினர்.

அப்போது ஜனநாயக கட்சியினருடன் சேர்ந்து, குடியரசு கட்சியினர் 13 பேரும் தீர்மானத்துக்கு ஆதரவாக ஓட்டு போட்டதால் அங்கு இந்த தீர்மானம் வெற்றிகரமாக நிறைவேறியது. அதனை தொடர்ந்து இந்த தீர்மானம் செனட் சபைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

செனட் சபையிலும் நிறைவேறியது

இந்த நிலையில், நேற்று முன்தினம் குடியரசு கட்சியினர் பெரும்பான்மையாக உள்ள செனட் சபையில் இந்த தீர்மானத்தின் மீது ஓட்டெடுப்பு நடத்தப்பட்டது. யாரும் எதிர்பாராத வகையில் அதிர்ச்சியளிக்கும் விதமாக அங்கு இந்த தீர்மானம் வெற்றிகரமாக நிறைவேறியது.

தீர்மானத்துக்கு ஆதரவாக 59 ஓட்டுகளும், எதிராக 41 ஓட்டுகளும் கிடைத்தன. குடியரசு கட்சியை சேர்ந்த 12 உறுப்பினர்கள் ஜனநாயக கட்சியினருடன் சேர்ந்து தீர்மானத்தை ஆதரித்து ஓட்டு போட்டதால் இது சாத்தியமானது.

எல்லைச்சுவர் கட்டுவதற்காக ஜனாதிபதி டிரம்ப் தனது அதிகாரத்தை மீறி செயல்பட்டதாக, தீர்மானத்துக்கு ஆதரவாக ஓட்டுப்போட்ட குடியரசு கட்சி உறுப்பினர்கள் தெரிவித்தனர்.

மறுப்பு ஓட்டுரிமை அதிகாரம்

நாடாளுமன்றத்தில் இருசபைகளிலும் நிறைவேற்றப்பட்ட இந்த தீர்மானம் அடுத்ததாக ஜனாதிபதியின் ஒப்புதலுக்காக அனுப்பிவைக்கப்படும்.

மெக்சிகோ எல்லையில் சுவர் எழுப்புவதில் டிரம்ப் உறுதியாக இருப்பதால் அவர் தனது மறுப்பு ஓட்டுரிமை அதிகாரத்தை பயன்படுத்தி இந்த தீர்மானத்தை நிராகரித்துவிடுவார் என நம்பப்படுகிறது.

இருசபைகளிலும் 3-ல் 2 பங்கு பெரும்பான்மையுடன் தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருந்தால் ஜனாதிபதியின் மறுப்பு ஓட்டுரிமை அதிகாரத்தை முறியடிக்கலாம்.

ஆனால் இந்த விவகாரத்தில் அதற்கு வாய்ப்பு அமையவில்லை என்பதால் தீர்மானம் உறுதியாக நிராகரிக்கப்படும்.

குடியரசு கட்சியினருக்கு நன்றி

இதற்கிடையில் செனட் சபையில் நடந்த ஓட்டெடுப்பு குறித்து டிரம்ப் தனது டுவிட்டரில், “ஜனநாயக கட்சியினரால் தூண்டப்பட்ட தீர்மானத்தின் மீது எனது மறுப்பு ஓட்டுரிமையை பயன்படுத்த தயாராகிறேன். இந்த தீர்மானம் நமது நாட்டுக்குள் குற்றங்கள், போதைப்பொருட்கள் உள்ளிட்டவற்றை கொண்டுவருவதற்கு ஏதுவாக எல்லையை திறப்பது தவிர வேறு எதையும் செய்யாது” என தெரிவித்தார்.

மற்றொரு டுவிட்டர் பதிவில் அவர், எல்லை பாதுகாப்பு மற்றும் அவசர தேவையான எல்லைச் சுவருக்கு ஆதரவு அளிக்கும் விதமாக ஜனநாயக கட்சியினரின் தீர்மானத்துக்கு எதிராக ஓட்டு போட்ட உறுதியான குடியரசு கட்சி உறுப்பினர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவிப்பதாக குறிப்பிட்டார்.