நியூசிலாந்து நாட்டில் பயங்கரம் 2 மசூதிகளில் துப்பாக்கிச்சூடு; 49 பேர் பலி தாக்குதலை ‘பேஸ்புக்’கில் வெளியிட்டதால் பெரும் பரபரப்பு


நியூசிலாந்து நாட்டில் பயங்கரம் 2 மசூதிகளில் துப்பாக்கிச்சூடு; 49 பேர் பலி தாக்குதலை ‘பேஸ்புக்’கில் வெளியிட்டதால் பெரும் பரபரப்பு
x
தினத்தந்தி 15 March 2019 11:45 PM GMT (Updated: 15 March 2019 9:11 PM GMT)

நியூசிலாந்து நாட்டில் 2 மசூதிகளில் அடுத்தடுத்து நடந்த துப்பாக்கிச்சூட்டில் 49 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை ‘பேஸ்புக்’ சமூக வலைத்தளத்தில் வெளியிட்டதால் பெரும்பரபரப்பு ஏற்பட்டது.

கிறைஸ்ட்சர்ச், 

நியூசிலாந்து நாட்டில் நேற்று இருவேறு மசூதிகளில் அடுத்தடுத்து நடந்த துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் அந்த நாட்டை உலுக்கி உள்ளன.

முதல் சம்பவம், கிறைஸ்ட்சர்ச் நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள அல் நூர் மசூதியில் நடந்தது. அங்கு நேற்று வெள்ளிக்கிழமை என்பதால் உள்ளூர் நேரப்படி மதியம் 1.45 மணிக்கு வழக்கம்போல தொழுகை நடைபெற்றுக்கொண்டிருந்தது. அதில் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

அப்போது அங்கு பயங்கரவாதி ஒருவர் தானியங்கி துப்பாக்கியுடன் நுழைந்தார். நுழைந்த வேகத்தில் அங்கு தொழுகையில் ஈடுபட்டிருந்தவர்கள் மீது சரமாரியாக துப்பாக்கியால் சுட்டார். சில நிமிடங்களே இந்த துப்பாக்கிச்சூடு நீடித்தது. ஆனால் அதற்குள் குண்டு பாய்ந்து பலரும் ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்தனர்.

‘பேஸ்புக்’கில் நேரலை

இந்த துப்பாக்கிச்சூட்டை நடத்திய நபர், அதைத் தன் தலையில் பொருத்தி இருந்த அதிநவீன கேமராவில், படம் பிடித்து ‘பேஸ்புக்’ சமூக வலைத்தளத்தில் நேரலையாக ஒளிபரப்பினார். இது உலகமெங்கும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதற்கு மத்தியில் அந்த நபர், மசூதியில் இருந்து வெளியே சாலைக்கு வந்து அங்கு சிலரை சுட்டு வீழ்த்தினார். அதைத் தொடர்ந்து தனது காருக்கு சென்ற அவர், காரில் இருந்து இன்னொரு துப்பாக்கியை எடுத்துக்கொண்டு மீண்டும் மசூதிக்கு திரும்பினார். ஆனால் அங்கு குண்டு பாய்ந்து பலரும் தரையில் வீழ்ந்து கிடந்ததைக் கண்டார். வெளியே வந்த அவர் அங்கே நின்றிருந்த ஒரு பெண்ணை சுட்டார். அதைத் தொடர்ந்து தனது காரில் ஏறினார். காரில் ‘பயர்’ என்ற ஆங்கில ‘ராக் பேண்ட்’ குழுவின் பாடலை ஸ்பீக்கரில் அலற விட்டுச்சென்றார்.

தப்பிய வங்காளதேச கிரிக்கெட் அணி

இந்த மசூதியில் துப்பாக்கிச்சூடு நடந்து கொண்டிருந்தபோது, கிறைஸ்ட்சர்ச் நகரில் நியூசிலாந்து அணியுடன் டெஸ்ட் போட்டியில் மோத இருந்த வங்காளதேச கிரிக்கெட் அணியினர் தொழுகை நடத்த வந்தனர்.

ஆனால் அவர்கள் அங்கு பயங்கரவாதி துப்பாக்கிச்சூடு நடத்திக்கொண்டிருப்பதை அறிந்து மயிரிழையில் அங்கிருந்து தப்பினர்.

2-வது துப்பாக்கிச்சூடு

அடுத்த சில நிமிடங்களில் கிறைஸ்ட்சர்ச் நகரின் புறநகரான லின்உட் மஸ்ஜித் மசூதியிலும் துப்பாக்கிச்சூடு நடந்தது. அதிலும் பலர் சிக்கினர்.

குண்டு பாய்ந்து ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்தனர். அங்கும் பெரும் பதற்றமான சூழல் நிலவியது.

49 பேர் பலி

இவ்விரு மசூதிகளிலும் நடந்த துப்பாக்கிச்சூடு சம்பவங்களில் 49 பேர் உயிரிழந்தனர்; படுகாயம் அடைந்த 20-க்கும் மேற்பட்டவர்கள் அங்கிருந்து மீட்கப்பட்டு ஆம்புலன்சுகளில் ஆஸ்பத்திரிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர் என முதல் கட்ட தகவல்கள் கூறுகின்றன.

இவ்விரு துப்பாக்கிச்சூடு சம்பவங்களை தொடர்ந்து முன் எச்சரிக்கை நடவடிக்கையாக அந்த நாட்டில் உள்ள மசூதிகளை மூடி வைக்குமாறு போலீசார் கேட்டுக்கொண்டனர். துப்பாக்கிச்சூடு நடந்த மசூதி பகுதிகளை போலீஸ் படையினர் சுற்றி வளைத்தனர்.

பள்ளிகள் மூடல்

துப்பாக்கிச்சூடு நடந்த பகுதிக்கு அருகே அமைந்துள்ள கதீட்ரல் சதுக்கத்தில் பருவநிலை மாற்றம் தொடர்பான பேரணியில் ஆயிரக்கணக்கான சிறுவர்கள் பங்கேற்றிருந்தனர். ஆனால் அவர்களை போலீசார் அங்கிருந்து பத்திரமாக அப்புறப்படுத்தினர்.

அந்த நகரில் உள்ள பள்ளிக்கூடங்கள் மூடப்பட்டன. பெற்றோர்கள் வந்து தங்களது குழந்தைகளை அழைத்துச்செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டு, அவர்கள் பதற்றமுடன் வந்து குழந்தைகளை வீடுகளுக்கு அழைத்துச்சென்றனர்.

பிரதமர் கண்டனம்

இந்த துப்பாக்கிச்சூடு சம்பவங்களுக்கு நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா கண்டனம் தெரிவித்தார்.

இதுபற்றி அவர் கூறுகையில், “நியூசிலாந்து நாட்டின் கருப்பு நாட்களில் இதுவும் ஒன்று. நடந்திருப்பது அசாதாரணமான, முன் எப்போதும் நடந்திராத வன்செயல் ஆகும். இது பயங்கரவாத தாக்குதல்தான். இத்தகைய செயல்களுக்கு நியூசிலாந்தில் இடம் இல்லை” என்று குறிப்பிட்டார்.

இரு துப்பாக்கிச்சூடு சம்பவங்களுக்கும் உலக தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

ஆஸ்திரேலிய பயங்கரவாதி

துப்பாக்கிச்சூடு நடத்தியவர் கைது செய்யப்பட்டு விட்டார். அவர் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர் ஆஸ்திரேலிய நாட்டைச் சேர்ந்த 28 வயதான பிரெண்டன் டாரண்ட் என தெரிய வந்துள்ளது. இதை ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மாரீசன் உறுதி செய்தார்.

தாக்குதலையொட்டி பிரெண்டன் டாரண்ட், சமூக வலைத்தளத்தில் துப்பாக்கிச்சூட்டுக்கான பின்னணியை விவரிக்கும் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அகதிகள் குடியேற்றத்துக்கு எதிரான கருத்துகள் இடம் பெற்றுள்ளன.

Next Story