மசூத் அசார் விவகாரம்: சீனாவை சம்மதிக்க வைக்க முயற்சி நடக்கிறது


மசூத் அசார் விவகாரம்: சீனாவை சம்மதிக்க வைக்க முயற்சி நடக்கிறது
x
தினத்தந்தி 16 March 2019 11:00 PM GMT (Updated: 16 March 2019 7:51 PM GMT)

மசூத் அசார் விவகாரத்தில், சீனாவை சம்மதிக்க வைக்க முயற்சிகள் நடந்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

நியூயார்க்,

இந்திய நாடாளுமன்ற தாக்குதல் தொடங்கி, சமீபத்திய புல்வாமா தாக்குதல் வரை நடத்தி, பெருத்த உயிர்ச்சேதங்களை ஏற்படுத்திய ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத அமைப்பின் தலைவன் மசூத் அசாரை சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்க இந்தியா ஏற்கனவே எடுத்த முயற்சிகள் தோல்வி கண்டன. சீனா முட்டுக்கட்டை போட்டதே இதற்கு காரணம்.

இந்த நிலையில், புல்வாமா தாக்குதலை தொடர்ந்து, மசூத் அசாரை பயங்கரவாதியாக அறிவிக்க ஐ.நா. சபையின் பாதுகாப்பு கவுன்சிலில் அதன் நிரந்தர உறுப்பு நாடுகளான அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ் ஆகியவை தீர்மானம் கொண்டு வந்தன. அதுவும் சீனாவின் முட்டுக்கட்டையால் கிடப்பில் போடப்பட்டுள்ளது. இந்த நிலையில், மசூத் அசாரை சர்வதேச பயங்கரவாதியாக அறிவிப்பதில் சீனாவை சம்மதிக்க வைக்க முயற்சிகள் நடந்து வருகின்றன. குறிப்பாக இது தொடர்பாக பயன்படுத்தப்படுகிற வாசகங்களில் சில மாற்றங்களை செய்தால், சம்மதிக்கிறோம் என சீனா முன் வந்திருப்பதாக தெரிகிறது. இதுதொடர்பாக சமரச முயற்சிகள் நடந்து வருகின்றன.

இதற்கும் சீனா சம்மதிக்கா விட்டால், அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ் ஆகிய 3 நாடுகளும் இந்த விவகாரத்தை விசுவரூபம் எடுக்கச்செய்ய முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அந்த வகையில், ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் ஒரு தீர்மானம் கொண்டு வந்து அதை பகிரங்கமாக விவாதித்து ஓட்டெடுப்பு நடத்த முயற்சிக்கப்படும் என அந்த தகவல்கள் கூறுகின்றன.


Next Story