இந்தியா- பாகிஸ்தான் இடையேயான பதற்றத்தை தணிக்க ஆக்கப்பூர்வமான பங்களிப்பு அளித்தோம்: சீனா


இந்தியா- பாகிஸ்தான்  இடையேயான பதற்றத்தை தணிக்க ஆக்கப்பூர்வமான பங்களிப்பு அளித்தோம்: சீனா
x
தினத்தந்தி 19 March 2019 2:32 AM GMT (Updated: 19 March 2019 2:32 AM GMT)

இந்தியா- பாகிஸ்தான் இடையேயான பதற்றத்தை தணிக்க ஆக்கப்பூர்வமான வகையில் செயல்பட்டோம் என்று சீனா தெரிவித்துள்ளது.

பெய்ஜிங்,

ஜம்மு-காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பைச் சேர்ந்த பயங்கரவாதி ஒருவர், பாதுகாப்புப் படையினர் மீது கடந்த மாதம் 14-ஆம் தேதி நிகழ்த்திய தாக்குதலில் 40 வீரர்கள் உயிரிழந்தனர். இதையடுத்து, இந்தியா-பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே பதற்றமான சூழல் நிலவி வந்தது.
பாகிஸ்தானைச் சேர்ந்த ஜெய்ஷ் இ-முகமது அமைப்பின் தலைவர் மசூத் அஸாரை சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்கக் கோரும் தீர்மானம், ஐ.நா.பாதுகாப்பு கவுன்சிலில் தாக்கல் செய்யப்பட்டது. இதற்கு பாகிஸ்தானின் நெருங்கிய நட்பு நாடான  சீனா முட்டுக்கட்டை போட்டு வருகிறது. இந்நிலையில், பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் முகமது குரேஷி,  நாளை (மார்ச் 20) சீனாவுக்குப் பயணம் மேற்கொள்கிறார். அங்கு அவர் சீன வெளியுறவு அமைச்சர் வாங் யீயைச் சந்தித்துப் பேசுகிறார்.

இதற்கு மத்தியில் சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் கெங் சுவாங் கூறியதாவது, “ இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் அண்டை நாடாக இருப்பதால், அந்நாடுகளுக்கு இடையேயான பிரச்னைகளைப் போக்க சீனா உறுதிபூண்டுள்ளது. பிராந்தியத்தில் அமைதியையும், நிலைத்தன்மையையும் ஏற்படுத்த இரு நாடுகளும் பேச்சுவார்த்தையில் ஈடுபடுவதை சீனா தொடர்ந்து ஊக்குவித்து வருகிறது. 

வெளியுறவு அமைச்சர் முகமது குரேஷியுடனான பேச்சுவார்த்தையின்போது, இரு நாடுகளுக்கும் இடையே தற்போது நிலவி வரும் பதற்றநிலை குறித்து ஆலோசனை செய்யப்படும்.மசூத் அஸாரை சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்கும் விவகாரத்தில், பொறுப்புடனும், ஆக்கப்பூர்வமாகவும் சீனா நடந்துகொள்ளும். 

இந்த விவகாரத்தில் இந்தியா, பாகிஸ்தான் உள்பட அனைத்து நாடுகளுடனும் தொடர்பில் உள்ளோம். எனவே, இந்த விவகாரத்தில் முன்கூட்டியே எதுவும் தெரிவிக்க இயலாது. புல்வாமா தாக்குதலை தொடர்ந்து இந்தியா- பாகிஸ்தான் இடையே ஏற்பட்ட பதற்றத்தை தணிக்க ஆக்கப்பூர்வமான முறையில் செயல்பட்டோம்” இவ்வாறு அவர் தெரிவித்தார். 

Next Story