இந்தியா மீது இன்னொரு தாக்குதல் நடத்தப்பட்டால் நிலைமை மிகவும் மோசமானதாக அமையும்: அமெரிக்கா எச்சரிக்கை


இந்தியா மீது இன்னொரு தாக்குதல் நடத்தப்பட்டால் நிலைமை மிகவும் மோசமானதாக அமையும்: அமெரிக்கா எச்சரிக்கை
x
தினத்தந்தி 21 March 2019 5:14 AM GMT (Updated: 21 March 2019 5:14 AM GMT)

இந்தியா மீது இன்னொரு தாக்குதல் நடத்தப்பட்டால் அது பாகிஸ்தானுக்கு மிகவும் மோசமானதாக அமையும் என்று அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது.

வாஷிங்டன்,

தற்போது நிலவும் சூழலில் இந்தியா மீது மட்டும் இன்னொரு பயங்கரவாத தாக்குதல் நடந்தால், நிலைமை மோசமானதாக மாறும். இரு நாட்டுக்கும் இடையில் பதற்ற சூழல் அதிகரிக்கும் என்று அமெரிக்கா எச்சரித்துள்ளது.

வெள்ளை மாளிகையின் மூத்த அதிகாரி ஒருவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:- “ பாகிஸ்தான், பயங்கரவாதிகளுக்கு  எதிராக நீடித்த, நிலையான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். குறிப்பாக  ஜெய்ஷ்-இ-முகமது மற்றும் லஷ்கர்-இ-தொய்பா அமைப்புகள் மீது அவர்கள் நடவடிக்கை எடுத்தேயாக வேண்டும். தற்போது உள்ள சூழலில், இந்தியா மீது இன்னொரு பயங்கரவாத தாக்குதல் நடைபெற்றால், நிலமை மிக மிக மோசமாகிவிடும். இது இருநாடுகளுக்கும் ஆபத்தான நிலையாக அமையும். 

பாகிஸ்தான் தரப்பு சில பயங்கரவாதக் குழுக்களை முடக்கியுள்ளது. சில பயங்கரவாதிகளின் சொத்துகளையும் முடக்கியுள்ளது. அதேபோன்று ஜெய்ஷ் இ முகமது அமைப்பின் மீதும் சில நடவடிக்கைகளை அவர்கள் எடுத்துள்ளனர். அதே நேரத்தில் மிகவும் ஸ்திரத்தன்மையுடைய நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்பதில் அமெரிக்கா உறுதியாக உள்ளது. இது சம்பந்தமாக அமெரிக்கா, பல உலக நாடுகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது” என்றார்.

Next Story