டிரம்பின் தேர்தல் பிரசாரத்திற்கு ரஷ்யா உதவவில்லை: முல்லர் குழு அறிக்கை தாக்கல்


டிரம்பின் தேர்தல் பிரசாரத்திற்கு ரஷ்யா உதவவில்லை: முல்லர் குழு அறிக்கை தாக்கல்
x
தினத்தந்தி 25 March 2019 1:52 AM GMT (Updated: 25 March 2019 1:52 AM GMT)

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பின் தேர்தல் பிரசாரத்திற்கு ரஷ்யா உதவவில்லை என்று முல்லர் குழு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாஷிங்டன், 

அமெரிக்க நாட்டில் 2016–ம் ஆண்டு நவம்பர் 8–ந்தேதி ஜனாதிபதி தேர்தல் நடந்தது. இதில் குடியரசு கட்சி வேட்பாளராக போட்டியிட்ட டொனால்டு டிரம்ப் வெற்றி பெறவும், ஜனநாயக கட்சி வேட்பாளராக களம் கண்ட ஹிலாரி தோல்வி அடையவும் ரஷியா உதவியது என்ற புகார் எழுந்தது. குறிப்பாக ரஷிய ஏஜெண்டுகளும், அங்கு அதிகாரத்தில் இருந்தவர்களும் அமெரிக்க தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்துவதற்கான தகவல்களை பெற்றனர்; ஜனநாயக கட்சியினரின் இ–மெயில்களை இணையதளத்தில் சட்டவிரோதமாக புகுந்து திருடி கசிய விட்டு, ஹிலாரியின் பிரசாரத்தை பலவீனப்படுத்தினர் என கூறப்பட்டது.

இது தொடர்பாக ராபர்ட் முல்லர் தலைமையிலான சிறப்பு குழு கடந்த 22 மாதங்களாக விசாரணை நடத்தி வந்தது. இந்த விசாரணையை ஜனாதிபதி டிரம்பும், குடியரசு கட்சியினரும் சூனிய வேட்டை என விமர்சித்தனர். அத்துடன் முல்லர் விசாரணை குழு முன் அமர முடியாது என்று டிரம்ப் கூறினார். அதே நேரத்தில், பல மாதங்கள் நடந்த பேச்சு வார்த்தைக்கு பின்னர் விசாரணை குழு அனுப்பிய கேள்விகளுக்கு அவரது வக்கீல்கள் பதில் அளித்தனர்.

இப்போது விசாரணை முடிந்து, அதன் அறிக்கை, அமெரிக்க அரசு நீதித்துறையிடமும், அட்டார்னி ஜெனரல் வில்லியம் பாரிடமும் அண்மையில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த அறிக்கையை, அட்டார்னி ஜெனரல் வில்லியம் பார் ஞாயிற்றுக்கிழமை சமர்பித்தார். அதில், டிரம்பின் தேர்தல் பிரசாரத்திற்கு ரஷ்யா எந்த வகையிலும் உதவவில்லை என்று முல்லர் குழு அறிக்கையில் கண்டறியப்பட்டதாக  தெரிவிக்கப்பட்டுள்ளது. நான்கு பக்கங்கள் கொண்ட முல்லர் குழு அறிக்கையை அட்டார்னி ஜெனரல் வில்லியம் பார் தாக்கல் செய்தார். 

புளோரிடா விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த டொனால்டு டிரம்ப், “ தனது நிர்வாகத்தின் மீது துவக்கத்தில் இருந்தே தொங்கி கொண்டு இருந்த சந்தேகம் என்ற இருள், கடைசியில் அகற்றப்பட்டுள்ளது” என்றார். 

Next Story