ராபர்ட் முல்லரின் அறிக்கை மீது எந்த கருத்து மோதலும் இல்லை - டொனால்டு டிரம்ப்


ராபர்ட் முல்லரின்  அறிக்கை மீது எந்த கருத்து மோதலும் இல்லை - டொனால்டு டிரம்ப்
x
தினத்தந்தி 25 March 2019 6:05 AM GMT (Updated: 25 March 2019 6:05 AM GMT)

ராபர்ட் முல்லரின் அறிக்கைக்கு எந்தத் தடையும் இல்லை, எந்த கருத்து மோதலும் இல்லை என்று டொனால்டு டிரம்ப் கூறி உள்ளார்.

வாஷிங்டன்.

அமெரிக்காவில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 8-ந் தேதி நடந்த ஜனாதிபதி தேர்தலில் குடியரசு கட்சி வேட்பாளராக போட்டியிட்ட டொனால்டு டிரம்ப் வெற்றி பெறுவதற்காக ரஷியாவின்  தலையீடு  இருந்ததாக கூறப்பட்டது.

இது தொடர்பாக அமெரிக்காவின் உளவுத்துறையான மத்திய புலனாய்வு அமைப்பின் (எப்.பி.ஐ.) இயக்குனர் ஜேம்ஸ் கோமி தலைமையில்  விசாரணை நடைபெற்றது. பின்னர்  சிறப்பு விசாரணை அதிகாரியாக எப்.பி.ஐ. அமைப்பின் முன்னாள் இயக்குனர் ராபர்ட் முல்லர் மாற்றப்பட்டார்.

ராபர்ட் முல்லர் தலைமையிலான சிறப்பு குழு கடந்த 22 மாதங்களாக விசாரணை நடத்தி வந்தது. இப்போது விசாரணை முடிந்து, அதன் அறிக்கை, அமெரிக்க அரசு நீதித்துறையிடமும், அட்டார்னி ஜெனரல் வில்லியம் பாரிடமும் அண்மையில் தாக்கல் செய்யப்பட்டது. அதில், டிரம்பின் தேர்தல் பிரசாரத்திற்கு ரஷியா எந்த வகையிலும் உதவவில்லை என்று கண்டறியப்பட்டதாக  தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அறிக்கையை தொகுத்து அட்டர்னி ஜெனரல் வில்லியம் பார், பாராளுமன்றத்தில் பகிரக்கூடிய அம்சங்களை முடிவு செய்வார். வார இறுதியில் இந்த அறிக்கையின் முக்கிய கண்டுபிடிப்புகளை தெரிவிக்க இருப்பதாக பாராளுமன்ற தலைவர்களுக்கு அனுப்பிய கடிதத்தில் வில்லியம் பார் தெரிவித்திருக்கிறார். அதன்பிறகே அறிக்கையின் முழு விவரம் தெரியவரும்.

அதிபர் டிரம்பின் முன்னாள் கூட்டாளிகள் ஆறு பேர் மீதும், பல ரஷியர்கள் மீதும் இந்த சிறப்பு விசாரணை ஆணையம் ஏற்கெனவே குற்றம் சுமத்தியுள்ளது. டிரம்பின் பிரசாரத்திற்கு உதவ ரஷியர்கள் பலர் முன்வந்தபோதும் சதி நடந்திருப்பதற்கான ஆதாரத்தை முல்லர் கண்டறியவில்லை என அட்டர்னி ஜெனரல் தெரிவித்தார். 

இந்த அறிக்கையை இவ்வாறு அமைப்பதற்கு அதிபர் டிரம்பின் அழுத்தம் ராபர்ட் முல்லரின் விசாரணைக் குழுவின் மீது இருந்ததா என்றும் சிலர் கேள்வி எழுப்பிக் கொண்டிருக்க அதிபர் டிரம்போ தம்மீதான எந்த ஒரு விமர்சனத்திற்கும் ராபர்ட் முல்லரின் அறிக்கைக்கும் பதில் அளிக்கவில்லை.

அவர் புளோரிடாவில் உள்ள சொகுசு கடற்கரையில் தனது விடுமுறையைக் கழித்து வந்தார். இன்று அதிகாலை அவர் தனிவிமானம் மூலம் வாஷிங்டன் திரும்பினார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய டிரம்ப்,  "ராபர்ட் முல்லரின் அறிக்கைக்கு எந்தத் தடையும் இல்லை, எந்த கருத்து மோதலும் இல்லை" என்று கூறினார்.

Next Story