நியூசிலாந்து மசூதி தாக்குதல் லைவ் வீடியோ; முகநூல், யூடியூப் மீது பிரான்ஸ் முஸ்லிம் கவுன்சில் வழக்கு


நியூசிலாந்து மசூதி தாக்குதல் லைவ் வீடியோ; முகநூல், யூடியூப் மீது பிரான்ஸ் முஸ்லிம் கவுன்சில் வழக்கு
x
தினத்தந்தி 25 March 2019 2:04 PM GMT (Updated: 25 March 2019 2:04 PM GMT)

நியூசிலாந்து மசூதி தாக்குதலை லைவ் வீடியோவாக வெளியிட்ட முகநூல் மற்றும் யூடியூப் மீது பிரான்ஸ் முஸ்லிம் கவுன்சில் வழக்கு தொடர்ந்துள்ளது.

பாரீஸ்,

நியூசிலாந்து நாட்டின் கிறைஸ்ட்சர்ச் நகரில் உள்ள அல்நூர் மசூதியிலும், லின்உட் மஸ்ஜித் மசூதியிலும் பயங்கரவாதிகள் கடந்த 15ந்தேதி துப்பாக்கிச்சூடு நடத்தி 49 பேரை கொன்று குவித்தனர்.

இந்த தாக்குதலில் ஏராளமானோர் படுகாயமும் அடைந்தனர். தாக்குதலில் முக்கிய குற்றவாளியான ஆஸ்திரேலிய நாட்டை சேர்ந்த 28 வயதான பிரெண்டன் டாரண்ட் கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்டுள்ளான்.

இந்த நிலையில், துப்பாக்கி சூடு நடந்த சம்பவம் லைவ் வீடியோவாக வெளியானதற்கு கடும் கண்டனம் எழுந்துள்ளது.  இதற்கு பிரான்ஸ் நாட்டிலுள்ள முஸ்லிம் கவுன்சில் எதிர்ப்பு தெரிவித்துள்ளதுடன் வழக்கும் பதிவு செய்துள்ளது.

இதுபற்றி அந்த கவுன்சில், முகநூல் மற்றும் யூடியூப் ஆகிய இரு தொழில் நுட்ப நிறுவனங்களின் பிரான்ஸ் நாட்டு கிளைகளின் மீது வழக்கு தொடர்ந்துள்ளோம் என தெரிவித்துள்ளது.

தீவிரவாதத்தினை தூண்டும் வகையிலான வன்முறை பதிவுகளை கொண்ட செய்தியை வெளியிட்டும், மனித கண்ணியத்தினை தீவிரமுடன் மீறும் வகையில் மற்றும் சிறுவர்கள் காணும் வகையில் வீடியோவை லைவ்வாக ஒளிபரப்பி உள்ளனர்.  இதனை கண்டித்து புகார் அளித்துள்ளோம் என தெரிவித்து உள்ளது.

Next Story