உலக செய்திகள்

அமெரிக்கா-சீனா வர்த்தக பேச்சில் முக்கிய பிரச்சினைகளுக்கு தீர்வுவெள்ளை மாளிகை அறிவிப்பு + "||" + White House Announcement

அமெரிக்கா-சீனா வர்த்தக பேச்சில் முக்கிய பிரச்சினைகளுக்கு தீர்வுவெள்ளை மாளிகை அறிவிப்பு

அமெரிக்கா-சீனா வர்த்தக பேச்சில் முக்கிய பிரச்சினைகளுக்கு தீர்வுவெள்ளை மாளிகை அறிவிப்பு
அமெரிக்கா, சீனா இடையேயான வர்த்தக பேச்சுவார்த்தை பிரச்சினைகளுக்கு தீர்வு தரும் என்று வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது.
வாஷிங்டன்,

உலகின் இருபெரும் வல்லரசு நாடுகளான அமெரிக்காவுக்கும், சீனாவுக்கும் இடையே நீண்ட காலமாக வர்த்தக மோதல்கள் இருந்து வருகின்றன.

இதன் காரணமாக சீன பொருட்கள் மீது அமெரிக்கா 250 பில்லியன் டாலருக்கு (ஒரு பில்லியன் என்பது 100 கோடி டாலர்.) கூடுதல் வரி விதித்தது. சீனாவும் அமெரிக்க பொருட்கள் மீது 110 பில்லியன் டாலர் கூடுதல் வரி விதித்து பதிலடி தந்தது.

இதற்கிடையே அமெரிக்க ஜனாதிபதி டிரம்பும், சீன அதிபர் ஜின்பிங்கும், கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் அர்ஜென்டினா நாட்டின் தலைநகர் பியுனோஸ் அயர்ஸ் நகரில் நடந்த ‘ஜி-20’ உச்சி மாநாட்டின் முடிவில் சந்தித்து பேசினர். அப்போது இருதரப்பு வர்த்தகப் போரை நிறுத்தி வைக்க ஒப்புக்கொண்டனர். மேலும், ஜனவரி 1-ந்தேதி முதல் 3 மாத காலத்துக்கு கூடுதல் வரிகளை விதிப்பதில்லை என்றும் முடிவு எடுத்தனர். அதைத்தொடர்ந்து அமெரிக்கா மற்றும் சீனா வர்த்தக அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

இதுதொடர்பாக வாஷிங்டன் வெள்ளை மாளிகை செய்தி தொடர்பாளர் சாரா சாண்டர்ஸ் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் அவர், “அமெரிக்க வர்த்தக பிரதிநிதி ராபர்ட் லைட்ஹைசரும், நிதி மந்திரி ஸ்டீவன் மனுசினும், சீன துணை பிரதமர் லியு ஹீ மற்றும் அவரது குழுவினருடன் 3-ந்தேதி முதல் 5-ந்தேதி வரை பேச்சுவார்த்தை நடத்தினர். அமெரிக்கா, சீனா இடையேயான வர்த்தக பேச்சுவார்த்தை நல்ல பலன்களை தரும் வகையில் அமைந்தன. பல முக்கிய விஷயங்களில் தீர்வு ஏற்பட்டுள்ளது” என கூறி உள்ளார்.

இரு தரப்பு வர்த்தக பேச்சுவார்த்தை விரைவில் முடிவினை எட்டும் என நம்பிக்கை தெரிவித்து டிரம்புக்கு, ஜின்பிங் கடிதம் எழுதி உள்ளார்.