பாலகோட் தாக்குதல்: சம்பவ இடத்திற்கு சர்வதேச பத்திரிகையாளர்களை அழைத்து சென்ற பாகிஸ்தான்


பாலகோட் தாக்குதல்: சம்பவ இடத்திற்கு சர்வதேச பத்திரிகையாளர்களை அழைத்து சென்ற பாகிஸ்தான்
x
தினத்தந்தி 11 April 2019 8:23 AM GMT (Updated: 11 April 2019 10:19 AM GMT)

பாலகோட் தாக்குதல் நடைபெற்று 43 நாட்களுக்கு பிறகு சம்பவ இடத்திற்கு சர்வதேச பத்திரிகையாளர்களை பாகிஸ்தான் அழைத்து சென்று உள்ளது.

பாலகோட் தாக்குதல் நடைபெற்ற 43 நாள்கள் கழித்து, பாகிஸ்தானின் இஸ்லாமாபாத்தில் செயல்படும் சர்வதேச ஊடகங்களை இந்திய விமானப்படை தாக்குதல் நடத்தியதாகக் குறிப்பிடும் அந்தப் பகுதிக்கு பாகிஸ்தான் அழைத்துச்சென்றது. இந்தப் பயணத்தின்போது சில வெளிநாட்டு அதிகாரிகளும், சில நாடுகளின் தூதுவர்களும் உடன் இருந்தனர். 

முன்னதாக தாக்குதல் நடைபெற்ற சில தினங்களில் பாகிஸ்தான், ஊடகங்களை அழைத்துச் செல்ல தயாராக இருப்பதாக தெரிவித்தது. ஆனால், பின்னர் அந்த முடிவில் இருந்து பின்வாங்கியது. இந்த நிலையில்தான், தாக்குதல் நடந்து 43 நாட்களுக்குப் பின்னர் சில பத்திரிகையாளர்களை அனுமதித்துள்ளது  பாகிஸ்தான். ஆனால், 'சிறிது நேரம்தான் அங்கிருப்பவர்களிடம் பேச வேண்டும்' உள்ளிட்ட பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதாக அங்கு சென்ற பத்திரிகையாளர்கள் தெரிவிக்கின்றனர்.
 
இந்தப் பயணம் தொடர்பாக பாகிஸ்தானின் ராணுவ செய்தித்தொடர்பாளர் கென் ஆசிப் கபூர் தனது ட்விட்டர் பக்கத்தில், கூறி இருப்பதாவது:-

``சர்வதேச பத்திரிகையாளர்களும், பல்வேறு நாட்டைச் சேர்ந்த தூதுவர்கள் மற்றும் ராணுவ அதிகாரிகளும் இந்தியா தாக்குதல் நடத்தியதாகச் சொன்ன பாலகோட் பகுதிகளைப் பார்வையிட்டனர். இந்தியா சொல்லியதற்கு எதிராகத்தான் கள நிலவரம் உள்ளது’ என கூறி உள்ளார்.

இதில் பயணம் செய்த பி.பி.சி நிறுவனத்தின் பத்திரிகையாளர் ஒருவர், ''இஸ்லாமாபாத்தில் ஹெலிகாப்டரில் பயணம் தொடங்கியது. மன்சேஹ்ரா என்னும் இடத்தில் முதலில் ஹெலிகாப்டர் தரையிறங்கியது. அதனைத் தொடர்ந்து, சுமார் ஒன்றரை மணிநேரம் கடுமையான மலைப் பாதைகளில் பயணம் மேற்கொண்டோம்.

இஸ்லாமிய மத பள்ளியான மதரசாவுக்கு செல்லும் பாதையில், சில இடங்களில் குண்டு விழுந்த தடங்களும், சில மரங்கள் வேரோடு சாய்ந்திருந்ததையும் காண முடிந்தது. அந்தப் பகுதி, மனித நடமாட்டம் இல்லாத பகுதியாகத்தான் இருந்தது'' என்கிறார், அந்த பத்திரிகையாளர்.

இறுதியாக, மலை உச்சியில் இருந்த மதரசாவுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். இங்குதான் தீவிரவாத முகாம் இருப்பதாகவும், விமானப் படை நடத்திய தாக்குதலில் பலர் பலியானதாகவும் இந்தியா தெரிவித்திருந்தது.

மதரசா தொடர்பாக பி.பி.சி வெளியிட்டுள்ள கட்டுரையில், ``அந்தக் கட்டிடங்களின் அமைப்பைக் காணும்போது, புதிதாகக் கட்டப்பட்டது போன்று தெரியவில்லை. மேலும், தாக்குதலில் பெரிய அளவில் பாதிக்கப்பட்ட இடம் போன்றும் அது இல்லை” எனக் குறிப்பிட்டுள்ளது. 

மேலும், கட்டிடங்கள் அப்படியேதான் உள்ளன எனவும், சில பகுதிகள் பழைய கட்டிடங்களாகத்தான் உள்ளன எனவும், அங்கு சுமார் 150 முதல் 200 மாணவர்கள் வரை படிக்கிறார்கள் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. 

மதரசா பள்ளியில் இருந்த அறிவிப்புப் பலகை ஒன்றில், பிப்ரவரி 27 முதல் மார்ச் 14-ம் தேதி வரை மதரசா பள்ளி மூடப்படும் என்ற அறிவிப்பு இருந்தது. இது தொடர்பாக அங்கிருந்த ஆசிரியர்களிடம் கேட்டபோது, இங்கு நிலவிய பதற்றமான சூழல் காரணமாக மூடப்பட்டிருந்ததாகத் தெரிவித்தனர். 

அந்த இடங்களுக்கு பத்திரிகையாளர்கள் அழைத்துச் செல்லப்பட்டாலும், குறிப்பிட்ட சில பகுதிக்குள் யாரையும் பாகிஸ்தான் அதிகாரிகள் அனுமதிக்கவில்லை. ஜெய்ஷ் - இ - முகமது தீவிரவாத இயக்கத்தின் தலைவர் மற்றும் அவரது உறவினர் தொடர்பான கேள்விகளுக்கு, பாகிஸ்தான் அதிகாரிகள் தொடர்ந்து பதில் அளிக்க மறுத்ததாகவும் பி.பி.சி தெரிவித்துள்ளது.

Next Story