உலக செய்திகள்

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ரஷியா தலையீடா? - விசாரணைக்குழு அறிக்கை நாடாளுமன்றத்தில் தாக்கல் + "||" + Russian intervention in the US presidential election? - Inquiry report submitted to parliament

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ரஷியா தலையீடா? - விசாரணைக்குழு அறிக்கை நாடாளுமன்றத்தில் தாக்கல்

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ரஷியா தலையீடா? - விசாரணைக்குழு அறிக்கை நாடாளுமன்றத்தில் தாக்கல்
அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ரஷியா தலையீடு இருந்ததா என்பது பற்றி விசாரணை நடத்திய விசாரணைக்குழு அறிக்கை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.
வாஷிங்டன்,

அமெரிக்காவில் கடந்த 2016-ம் ஆண்டு நவம்பர் 8-ந் தேதி ஜனாதிபதி தேர்தல் நடந்தது. இதில் குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்டு டிரம்ப் வெற்றி பெற்று ஜனாதிபதி ஆனார்.

இதற்கிடையில் அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில், ரஷியா தலையீடு இருந்ததாகவும், டிரம்ப்பை வெற்றி பெற செய்ய ரஷிய அதிகாரிகள் உதவியதாகவும் புகார் எழுந்தது. இது குறித்து விசாரிக்க ராபர்ட் முல்லர் தலைமையில் சிறப்பு விசாரணைக்குழு அமைக்கப்பட்டது.


இந்த குற்றச்சாட்டை திட்டவட்டமாக மறுத்து வந்த டிரம்ப், முல்லரின் விசாரணைக்குழுவை அவ்வப்போது கடுமையாக சாடினார். அத்துடன் டிரம்ப் நிர்வாகம் முல்லரின் விசாரணைக்குழுவுக்கு பல்வேறு வகையில் நெருக்கடி கொடுத்தது.

எனினும், சுமார் 2 ஆண்டு காலம் தீவிர விசாரணை நடத்திய அக்குழு தனது அறிக்கையை, அமெரிக்க அரசு நீதித்துறையிடமும், அட்டார்னி ஜெனரல் வில்லியம் பாரிடமும் தாக்கல் செய்தது.

அந்த அறிக்கையை ஆய்வு செய்த அட்டார்னி ஜெனரல் வில்லியம் பார், அறிக்கையில் உள்ள முக்கிய அம்சங்கள் குறித்து 4 பக்கங்கள் கொண்ட கடிதம் ஒன்றை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார்.

அதில் அவர், “2016-ம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலின் போது, தற்போதைய ஜனாதிபதி டிரம்போ அவரது பிரசார குழுவை சேர்ந்தவர்களோ ரஷியாவுடன் சேர்ந்து சதி செய்தார்கள் என்பதற்கு எந்தவித ஆதாரமும் முல்லரின் அறிக்கையில் இல்லை” என குறிப்பிட்டுள்ளார்.

ஆனால் இதனை ஏற்க மறுத்த ஜனநாயக கட்சியினர், முல்லரின் அறிக்கையை முழுமையாக வெளியிடாமல் டிரம்பை குற்றமற்றவர் என கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது என கூறினார். எனவே முல்லரின் முழு அறிக்கையை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர்.

அதன்படி 448 பக்கங்கள் கொண்ட முல்லரின் முழுமையான அறிக்கை நேற்று முன்தினம் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. அந்த அறிக்கையில், “ஜனாதிபதி தேர்தலின் போது டிரம்பின் பிரசாரத்துக்கும் ரஷியாவுக்கும் இடையில் சதி நிகழ்ந்ததாக கண்டறியப்படவில்லை. அதே சமயம் டிரம்ப் விசாரணையை தடுக்க முயன்றாரா என்பது பற்றிய உறுதியான சட்டமுடிவை எட்ட முடியவில்லை” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், விசாரணை குழுவில் இருந்து முல்லரை நீக்க வெள்ளை மாளிகை வக்கீலுக்கு டிரம்ப் உத்தரவிட்டதாகவும், ஆனால் அதில் உடன்பாடு இல்லாததால் வெள்ளை மாளிகை வக்கீல் பதவி விலகியதாகவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முல்லரின் விசாரணை அறிக்கையின் மூலம் முழுமையாக மற்றும் ஒட்டுமொத்தமாக குற்றச்சாட்டு விடுவிக்கப்பட்டுள்ளது என கூறிய டிரம்ப் இது தங்களுக்கான முழு வெற்றி என குறிப்பிட்டார்.

எனினும் இது முழுமையாக முடிவடைந்துவிடவில்லை என கூறும் ஜனநாயக கட்சியினர் இந்த விவகாரத்தில் டிரம்புக்கு தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வருகின்றனர்.

விசாரணை அதிகாரி ராபர்ட் முல்லர் நாடாளுமன்றத்தில் ஆஜராகி தங்களின் கேள்விகளுக்கு பதில் அளிக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளனர்.


தொடர்புடைய செய்திகள்

1. அமெரிக்க ஜனாதிபதி தேர்தல்: ஜனநாயக கட்சி வேட்பாளர் போட்டியில் இருந்து பெண் எம்.பி. விலகல்
அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளருக்கான போட்டியில் இருந்து பெண் எம்.பி. விலகினார்.
2. அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் டிரம்ப் மீண்டும் போட்டி: 18-ந்தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கிறார்
அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் டிரம்ப் மீண்டும் போட்டியிடுவது தொடர்பாக, 18-ந்தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கிறார்.