உலக செய்திகள்

இந்தியாவிலும் 12 புதிய அணுஉலைகள் நிறுவ திட்டம் - அணுசக்தி துறை தலைவர் பேச்சு + "||" + India plans to install 12 new nuclear reactors - Speech at the Atomic Energy Department

இந்தியாவிலும் 12 புதிய அணுஉலைகள் நிறுவ திட்டம் - அணுசக்தி துறை தலைவர் பேச்சு

இந்தியாவிலும் 12 புதிய அணுஉலைகள் நிறுவ திட்டம் - அணுசக்தி துறை தலைவர் பேச்சு
இந்தியாவில் 12 புதிய அணுஉலைகள் நிறுவ திட்டமிட்டுள்ளதாக அணுசக்தி துறை தலைவர் கூறியுள்ளார்.
மாஸ்கோ,

மின் உற்பத்திக்காக இந்தியாவில் புதிதாக 12 அணு உலைகள் நிறுவப்படும் என்று ரஷியாவில் நடந்த கண்காட்சியில் பங்கேற்ற இந்திய அணுசக்தி துறைத்தலைவர் கே.என்.வியாஸ் கூறியுள்ளார்.

ரஷியாவில் உள்ள கோச்சி என்ற நகரில் அண்மையில் 11-வது சர்வதேச அணுசக்தித்துறை கண்காட்சி நடந்தது. ‘ரொசாட்டம்’ என்ற அமைப்பின் ஆதரவுடன் நடந்த இந்த கண்காட்சியில் 74 நாடுகளை சேர்ந்த விஞ்ஞானிகள் உள்பட 3,600 பேர் கலந்துகொண்டனர். இந்த நிகழ்ச்சியில், மருத்துவம், விண்வெளிப் பயணம் மற்றும் ஆராய்ச்சி, துருவப் பிரதேசமான ‘ஆர்டிக்’ பகுதியில் மேற்கொள்ளப்படும் ஆய்வுகள் என பல்வேறு துறைகளில் அணுக்கரு தொழில்நுட்பத்தைப் பயன் படுத்துவதற்கான வாய்ப்புகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.


இந்த சர்வதேச கண்காட்சிக்கு வாழ்த்து தெரிவித்துள்ள ரஷிய அதிபர் விளாடிமிர் புதின், இந்த நிகழ்ச்சி அணுமின் தொழில்நுட்பத்தில் ரஷியாவின் தற்போதைய நிலைக்கு மேலும் வலுவூட்டுவதாக அமைந்துள்ளது’ என்று கூறியுள்ளார்.

அதேபோல, இந்த சர்வதேச கண்காட்சி, நல்வாழ்வுக்கு உதவும் அணுக்கதிர் வீச்சு என்பது குறித்தும், எதிர்காலத் தேவைகளுக்கு அமையப் போகும் புதிய தொழில்நுட்பங்கள் குறித்தும் விவாதிப்பதற்காக நடத்தப்பட்டது என்று ரொசாட்டம் அமைப்பின் பொதுமேலாளர் கூறினார்.

இந்த சர்வதேசக் கண்காட்சியில், இந்திய அணுசக்தித் துறைத் தலைவர் கே.என். வியாஸ் கலந்துகொண்டார். அப்போது அவர் பேசியதாவது:-

அணுசக்தி தூய்மையானது மட்டுமல்ல; சாமானியர்களின் வாழ்க்கையில் பல முன்னேற்றங்களுக்கு வழிவகுக்கக்கூடியது. சுற்றுப்புறச் சூழலில் எந்த விதமான மாசுவையும் ஏற்படுத்தாமல், தூய்மையான எரிசக்தியாக திகழ்கிறது. இவற்றுடன் ஒப்பிட எதுவுமே இல்லை. அந்த அளவுக்கு ஈடு இணையற்றதாக அணுமின்சக்தி திகழ்ந்து வருகிறது.

இதனால் தான் இந்தியாவில் அணுசக்தித் துறைக்கு வித்திட்ட விஞ்ஞானி ஹோமி ஜஹாங்கீர் பாபா, ‘அணுக்கரு தொழில்நுட்பம் இந்திய மின்துறை வளர்ச்சிக்கு அத்தியாவசியமாகும்’ என்று ஏற்கனவே கூறியுள்ளார். அவரது கருத்து இன்று உண்மையாகி உள்ளது.

அணுக்கரு தொழில்நுட்பத்தில், தடையில்லா மின்சாரம் கிடைக்கக்கூடிய மற்றொரு சிறப்பு அம்சமும் உள்ளது. இதற்கு, உள்நாட்டு தொழில்நுட்பத்திலேயே உருவாக்கப்பட்ட இந்தியாவின் கைகா அணுமின் உற்பத்தி நிலையம், 99.3 சதவீத மின்சார உற்பத்தித் திறனுடன் செயல்பட்டு வருவதை உதாரணமாகச் சொல்லலாம். இதில் நல்ல முன்னேற்றமும், வளர்ச்சியும் கண்டுள்ளோம்.

தற்போது இந்தியாவில், கனநீர் கொண்டு இயங்கும் 18 அணு உலைகள் செயல்பாட்டில் இருந்து வருகின்றன. மேலும், கனநீர் அடிப்படையிலான 10 புதிய உயர் அழுத்த அணுமின் உலைகளை அமைக்க பிரதமர் நரேந்திர மோடி ஒப்புதல் அளித்துள்ளார். அதோடு, மென்னீர் அடிப்படையில் செயல்படும் புதிய 2 அணு உலைகளை அமைக்கவும் திட்டமிட்டு வருகிறோம். இந்த 12 அணு உலைகளும் இந்தியாவில் நிறுவப்படும்.

அணு துறையினால், தற்போது, இந்திய தொழில் நிறுவனங்கள் முன்னேற்றங்களை கண்டுள்ளன. அணு மின்சக்தி மற்றும் அத்துறை தொடர்பான பிற சாதனங்களின் உற்பத்தி முறை மிகச் சரியாகவும், தர அடிப்படையில் மிகச் சிறந்ததாகவும் அமைய வேண்டியுள்ளது. அதனால், இந்த துறைக்கான உபகரணங்களையும், எந்திரங்களையும் உற்பத்தி செய்ய நினைக்கும் நிறுவனங்கள், அதற்குத் தேவைப்படும் தரத்துக்கு தங்களை மேம்படுத்திக்கொள்கின்றன. எனவே, அணுஉலைகள் மின்உற்பத்தியில் மட்டுமின்றி, ஒட்டுமொத்த சமூகமும் மேம்படவும் உதவும்.

இந்தியாவைப் பொறுத்தவரையில், அணுக் கதிர் தொழில்நுட்பத்தைக் கொண்டு, பல்வேறு புதிய கண்டுபிடிப்புகள் முளைவிடத் தொடங்கியுள்ளன. குறிப்பாக புற்றுநோய் உள்ளிட்ட வலி நிறைந்த நோய்களுக்காக கதிர்வீச்சு தொழில்நுட்பச் சாதனங்கள் மருத்துவத்துறையில் பயன்படுத்தப்படுகிறது. இதன்மூலம், குறைந்த செலவில் 60 சதவீதம் மேம்பட்ட சிகிச்சையை வழங்கி, புற்றுநோய் பாதித்த திசுகளைச் தேர்ந்தெடுத்து அழித்து விட முடிகிறது. இவ்வாறு அவர் பேசினார்.


தொடர்புடைய செய்திகள்

1. மழையால் இந்தியா- தென் ஆப்பிரிக்கா இடையேயான முதல் டி20 போட்டி ரத்து
இந்தியா- தென் ஆப்பிரிக்கா இடையேயான முதல் டி20 போட்டி மழை காரணமாக கைவிடப்பட்டது.
2. இந்தியா-தென்ஆப்பிரிக்கா மோதும் முதலாவது 20 ஓவர் போட்டி: தர்மசாலாவில் இன்று நடக்கிறது
இந்தியா-தென்ஆப்பிரிக்கா இடையிலான முதலாவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி தர்மசாலாவில் இன்று நடக்கிறது.
3. பாஜக அரசு பல முயற்சிகளை செய்து தமிழகத்தில் இந்தியை திணிக்க பார்க்கிறது : மு.க. ஸ்டாலின்
பாஜக அரசு பல முயற்சிகளை செய்து தமிழகத்தில் இந்தியை திணிக்க பார்க்கிறது என்று மு.க. ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.
4. இந்தியா-சுவிட்சர்லாந்து இடையே மூன்று ஒப்பந்தங்கள் கையெழுத்து
இந்திய ஜனாதிபதி ராம் நாத் கோவிந்த் சுவிட்சர்லாந்து நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.
5. இந்தியாவுடன் எதிர்பாராத விதமாக போர் மூளும் வாய்ப்பு உள்ளது - பாகிஸ்தான்
இந்தியாவுடன் எதிர்பாராத விதமாக போர் மூண்டு விட வாய்ப்பிருப்பதாக பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சர் ஷா மஹ்மூத் குரேஷி தெரிவித்துள்ளார்.