இலங்கையில் 8-வது வெடிகுண்டு வெடிப்பு, உயிரிழப்பு எண்ணிக்கை 160 ஆக உயர்வு, ஊரடங்கு உத்தரவு அமல்


இலங்கையில் 8-வது வெடிகுண்டு வெடிப்பு, உயிரிழப்பு எண்ணிக்கை 160 ஆக உயர்வு, ஊரடங்கு உத்தரவு அமல்
x
தினத்தந்தி 21 April 2019 9:53 AM GMT (Updated: 21 April 2019 9:53 AM GMT)

இலங்கையில் குண்டு வெடிப்பு சம்பவங்கள் தொடர்ந்த வண்ணம் உள்ளது.


உலகம் முழுவதும் இன்று ஈஸ்டர் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது. இலங்கையில் இதற்காக சிறப்பு பிரார்த்தனைக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. காலையில் கிறிஸ்தவ தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்ற போது பயங்கர சம்பவங்கள் நடைபெற்றது. கொச்சிக்கடை புனித அந்தோணியார் தேவாலயம் மற்றும் நீர்கொழும்புவில் உள்ள புனித செபாஸ்டியன் ஆலயம், மட்டக்களப்பு தேவாலயத்தில் அடுத்தடுத்து அதிபயங்கர குண்டுகள் வெடித்தன. 

குண்டு வெடிப்பு தாக்குதலில் தேவாலயங்களில் இருந்த அனைத்து பொருட்களும் சிதறியது. மேற்கூரையும் இடிந்து விழுந்தது. எங்கு பார்த்தாலும் இரத்த வெள்ளமாக காட்சியளித்தது. இதேபோன்று 3 நட்சத்திர ஓட்டல்களிலும் குண்டுகள் வெடித்தன. இந்த தாக்குதல்களில் காயம் அடைந்த நூற்றுக்கணக்கானோர் மீட்கப்பட்டு மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டனர்.  குண்டு வெடிப்பு தாக்குதலில் முதலில் 52 பேர் பலியாகியதாக தகவல் வெளியானது. தொடர்ந்து இந்த எண்ணிக்கை உயர்ந்து சென்றது. இதற்கிடையே பாதுகாப்பு ஏற்பாடுகள் முக்கிய இடங்களில் செய்யப்பட்டது.

தொடர் குண்டு வெடிப்பு

இந்த பதட்டம் அடங்குவதற்குள் மேலும் இரண்டு குண்டுகள் வெடித்துள்ளன. 

இலங்கையில் தெஹிவளை என்ற இடத்தில் உள்ள ஹோட்டலில் 7-வது குண்டு வெடித்ததாகவும், குண்டு வெடிப்பில் 2 பேர் உயிரிழந்ததாகவும் போலீஸ் தெரிவித்துள்ளது. தெமட்டகொடாவில் குடியிருப்பு பகுதியில் 8-வது குண்டுவெடிப்பு சம்பவம் நடைபெற்றுள்ளது. குண்டு  வெடிப்பு சம்பவங்களில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை உயர்ந்த வண்ணம் செல்கிறது. 160 பேர் உயிரிழந்துள்ளனர், 400க்கும் அதிகமானோர் காயம் அடைந்துள்ளனர் என தெரியவந்துள்ளது.

ஊரடங்கு உத்தரவு அமல் 

தொடர் குண்டு வெடிப்பு சம்பவங்களை அடுத்து ஊரடங்கு உத்தரவும் அமல் படுத்தப்படுகிறது என தகவல் வெளியாகியுள்ளது. சோசியல் மீடியாக்களின் பயன்பாட்டிற்கு தடையை அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.


Next Story