12 மீட்டர் படகில் 14 ஆயிரம் கிலோ மீட்டர் பயணம்: பசிபிக் பெருங்கடலை கடந்து சாதனை படைத்த மாற்றுத்திறனாளி


12 மீட்டர் படகில் 14 ஆயிரம் கிலோ மீட்டர் பயணம்: பசிபிக் பெருங்கடலை கடந்து சாதனை படைத்த மாற்றுத்திறனாளி
x
தினத்தந்தி 21 April 2019 10:30 PM GMT (Updated: 21 April 2019 8:46 PM GMT)

12 மீட்டர் படகில் 14 ஆயிரம் கிலோ மீட்டர் பயணம் செய்து, பசிபிக் பெருங்கடலை கடந்து மாற்றுத்திறனாளி ஒருவர் சாதனை படைத்தார்.

டோக்கியோ,

ஜப்பானின் குமமோடோ பிராந்தியத்தை சேர்ந்தவர் இவாமேட்டோ (வயது 52). பார்வையற்ற மாற்றுத்திறனாளியான இவர் அமெரிக்காவின் சாண்டியாகோ நகரில் வசிந்து வந்தார். பார்வை இல்லாத போதும் படகு ஓட்டும் அதீத திறமை கொண்ட இவருக்கு பசிபிக் பெருங்கடலை சுற்றிவர வேண்டும் என்பது நீண்டகால விருப்பம்.

கடந்த 2013-ம் ஆண்டு இதற்கான முதல் முயற்சியை மேற்கொண்டார். அப்போது பசிபிக் பெருங்கடலின் பாதி தூரத்தை கடந்துவிட்ட நிலையில், அவரது படகு திமிங்கலத்தின் மீது மோதி கவிழ்ந்தது. இதனால் கனவு நிறைவேறாமல் போனது. எனினும் தனது முயற்சியில் விடாப்பிடியாக இருந்த இவர், கடந்த பிப்ரவரி மாதம் 24-ந் தேதி சாண்டியாகோ நகரில் இருந்து, தனது 2-வது பயணத்தை தொடங்கினார். 12 மீட்டர் நீளம் கொண்ட தனது படகில் அமெரிக்காவை சேர்ந்த மாலுமியான டக் ஸிமித் என்பவரை வழிகாட்டியாக வைத்துக்கொண்டு, அவர் புறப்பட்டு சென்றார்.

டக் ஸிமித்தின் அறிவுறுத்தல்களை காதில் கேட்டு, அதன் அடிப்படையில் அசாத்தியமாக படகை இயக்கிய இவாமேட்டோ, சுமார் 2 மாதத்தில் 14 ஆயிரம் கிலோ மீட்டர் பயணம் செய்து, ஜப்பானின் புகுஷிமாவை சென்றடைந்தார். இதன் மூலம், பசிபிக் பெருங்கடலை கடந்த, முதல் பார்வையற்ற மாற்றுத்திறனாளி எனும் பெருமையை இவாமேட்டோ பெற்றுள்ளார்.


Next Story