இலங்கை தலைநகர் கொழும்புவில் 9வது குண்டு வெடிப்பு


இலங்கை தலைநகர் கொழும்புவில் 9வது குண்டு வெடிப்பு
x
தினத்தந்தி 22 April 2019 11:35 AM GMT (Updated: 22 April 2019 11:35 AM GMT)

இலங்கை தலைநகர் கொழும்புவில் 9வது குண்டு வெடிப்பு நடந்துள்ளது.

கொழும்பு,

இலங்கையில் கிறிஸ்தவர்களின் புனித திருவிழாவான ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு நேற்று தேவாலயங்களில் கிறிஸ்தவ மக்கள் பலர் இறைவழிபாட்டில் ஈடுபட்டு இருந்தனர்.  இந்நிலையில், கொழும்பு நகரின் 3 கிறிஸ்தவ ஆலயங்கள் மற்றும் 3 ஓட்டல்கள் ஆகியவற்றில் நேற்று காலை 8.45 மணியளவில் திடீரென குண்டுவெடிப்பு சம்பவங்கள் நடந்துள்ளன.

கொழும்புவில் உள்ள புனித அந்தோணியார் தேவாலயம், கடலோர நகரான நெகோம்போவில் உள்ள புனித செபாஸ்டியான் ஆலயம் மற்றும் பட்டிகலோவாவில் உள்ள ஆலயம் ஒன்றிலும் இந்த தாக்குதல்கள் நடந்துள்ளன.  

இதேபோன்று ஷாங்கிரிலா, தி சின்னமோன் கிராண்ட் மற்றும் கிங்ஸ்பரி ஆகிய 3 நட்சத்திர ஓட்டல்களிலும் 3 குண்டுவெடிப்பு சம்பவங்கள் நடந்துள்ளன.

நேற்று பிற்பகல் 2 மணியளவில், கொழும்பு புறநகரில் மிருகக்காட்சி சாலைக்கு அருகே ஒரு குண்டு வெடித்தது. அதில் 2 பேர் பலியானார்கள். கொழும்பு புறநகரான உருகொடவட்டாவில் ஒரு வீட்டில் போலீசார் சோதனை நடத்த நுழைந்தபோது, உள்ளே இருந்தவன் மனித வெடிகுண்டாக மாறி, குண்டு வெடிக்க செய்தான். இதில் 3 போலீசார் பலியானார்கள்.  இதனால் மொத்தம் 8 இடங்களில் குண்டு வெடிப்புகள் நிகழ்ந்தன.  இதுவரை 300க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

இலங்கையில் கொழும்பு நகரில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது.  அங்கு அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டு உள்ளது.  வேனில் கைப்பற்றப்பட்ட வெடிகுண்டு ஒன்றை செயலிழக்க செய்யும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டு இருந்தனர்.  இதனை முன்னிட்டு அந்த சாலையில் போக்குவரத்து தடை செய்யப்பட்டு இருந்தது.  இந்நிலையில் அந்த வெடிகுண்டு திடீரென வெடித்தது.

கொழும்பு கொச்சிக்கடை கந்தானையில் தேவாலயம் அருகே கைப்பற்றப்பட்ட வெடிகுண்டை செயலிழக்க செய்ய முயன்றபோது வெடித்துள்ளது.  இதனால் உயிர் சேதம் ஏதும் ஏற்படவில்லை.  இதனால் கொழும்பு நகரில் 9வது குண்டு வெடிப்பு சம்பவம் நடந்துள்ளது.

தொடர்ந்து பல இடங்களில் வெடிகுண்டுகள் பதுக்கி வைக்கப்பட்டு உள்ளனவா? என சோதனை நடைபெறுகிறது.  சந்தேகத்திற்கு உரிய நபர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

Next Story