ரஷியாவுக்கு ரெயிலில் சென்றார், வடகொரிய தலைவர் அதிபர் புதினுடன் முதல் சந்திப்பு


ரஷியாவுக்கு ரெயிலில் சென்றார், வடகொரிய தலைவர் அதிபர் புதினுடன் முதல் சந்திப்பு
x
தினத்தந்தி 24 April 2019 11:00 PM GMT (Updated: 24 April 2019 8:43 PM GMT)

ரஷிய அதிபர் புதினை முதல் முறையாக சந்தித்து பேச வடகொரிய தலைவர் கிம் ஜாங் அன் ரெயிலில் ரஷியா சென்றார்.

மாஸ்கோ,

கிழக்கு ஆசிய நாடுகளில் ஒன்றான வடகொரியா அணு ஆயுதம் மற்றும் ஏவுகணை சோதனைகளால் உலக நாடுகளை அச்சுறுத்தி வந்தது. இதனால் அந்நாடு சர்வதேச நாடுகளின் எதிர்ப்பை சம்பாதித்தது.

வடகொரியாவின் இந்த நடவடிக்கை அமெரிக்காவுக்கு கடும் ஆத்திரத்தை ஏற்படுத்தியதால், இரு நாடுகளுக்கும் இடையே போர் மூளும் அளவிற்கு பிரச்சினை தீவிரமானது. ஆனால் வடகொரியாவின் நட்பு நாடுகளான சீனா, ரஷியா ஆகியவை இந்த விவகாரத்தில் பேச்சுவார்த்தை மூலம் சுமுக தீர்வு காண விரும்பின.

பொருளாதார தடைகள்

இந்த சூழலில் தான், கடந்த ஆண்டு ஜூன் மாதம் அமெரிக்க ஜனாதிபதி டிரம்பும், வடகொரிய தலைவர் கிம் ஜாங் அன்னும் முதல் முறையாக சந்தித்து பேசினர்.

இந்த சந்திப்பு வடகொரியாவின் போக்கில் பெரிய மாற்றத்தை கொண்டு வந்தது. அந்த நாடு அணு ஆயுதம் மற்றும் ஏவுகணை சோதனைகளை கைவிட்டுவிட்டு, அமைதிக்கு திரும்பியது.

எனினும் அமெரிக்காவின் பொருளாதார தடைகளால், கடும் நிதி நெருக்கடியில் தவிக்கும் வடகொரியா தங்கள் நாடு இயல்பு நிலைக்கு திரும்ப, அமெரிக்கா அந்த பொருளாதார தடைகளை திரும்பப்பெற வேண்டும் என வலியுறுத்தியது.

மோதல் போக்கு

இதனை அமெரிக்கா ஏற்க மறுத்ததால், கிம் ஜாங் அன்-டிரம்ப் இடையிலான 2-வது சந்திப்பு தோல்வியில் முடிந்தது. இதனால் அமெரிக்கா தனது வாக்குறுதியை நிறைவேற்றாவிட்டால் அணு ஆயுத கொள்கைக்கு திரும்பக்கூடும் என வடகொரியா எச்சரித்தது.

அதன்படி கடந்த 2 வாரங்களுக்கு முன்பு அணுகுண்டுடன் கூடிய அதிநவீன ஆயுதம் ஒன்றை சோதித்து வடகொரியா அதிரவைத்தது. இதனால் அமெரிக்கா மற்றும் வடகொரியா இடையே மீண்டும் மோதல் போக்கு உருவாகும் சூழல் ஏற்பட்டு இருக்கிறது.

ரஷியா சென்றார்

இந்த நிலையில், வரலாற்றில் முதல் முறையாக ரஷிய அதிபர் புதினும், வடகொரியா தலைவர் கிம் ஜாங் அன்னும் சந்தித்து பேச முடிவு செய்யப்பட்டது. இந்த சந்திப்பு விரைவில் நடக்கும் என கூறப்பட்ட நிலையில், கிம் ஜாங் அன் நேற்று முன்தினம் ரெயிலில் ரஷியாவுக்கு புறப்பட்டு சென்றார்.

நீண்ட தூர பயணத்துக்கு பிறகு நேற்று காலை, அவரது ரெயில் ரஷியாவின் பசிபிக் துறைமுக நகரான விளாடிவோஸ்டோக்கில் உள்ள ஹசன் ரெயில் நிலையத்தை சென்றடைந்தது. அங்கு அவருக்கு ரஷிய அதிகாரிகள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

பயனுள்ள பயணம்

அதனை தொடர்ந்து ரெயில் நிலைய வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள இருநாடுகளுக்கு இடையேயான நட்புறவு இல்லத்தை கிம் ஜாங் அன் பார்வையிட்டார். இந்த இல்லம் முன்னாள் வடகொரிய அதிபரும், கிம் ஜாங் அன்னின் தாத்தாவின் ரஷிய பயணத்தின் நினைவாக கட்டப்பட்டதாகும்.

இதையடுத்து, ரெயில் நிலையத்துக்கு வெளியே பத்திரிகையாளர்களுக்கு பேட்டி அளித்த கிம் ஜாங் அன், “எமது மக்களின் அன்பான உணர்வுகளை தாங்கி ரஷியா வந்துள்ளேன். நான் ஏற்கனவே கூறியதுபோல இந்த பயணம் வெற்றிகரமாகவும், பயன் உள்ளதாகவும் அமையும் என நம்புகிறேன்” என்று கூறினார்.

மேலும், “மரியாதைக்குரிய அதிபர் புதின் உடனான பேச்சுவார்த்தையில், கொரிய தீபகற்பத்தின் நிலைமை தொடர்பாகவும், எங்கள் இருதரப்பு உறவுகளின் வளர்ச்சி குறித்தும் விவாதிக்க முடியும் என்று நான் நம்புகிறேன்” என்றும் குறிப்பிட்டார்.

8 ஆண்டுகளுக்கு பின்...

அதனை தொடர்ந்து, அவர் பலத்த பாதுகாப்புடன் காரில் அழைத்து செல்லப்பட்டார். கிம் ஜாங் அன்- புதின் சந்திப்பு எங்கு எப்போது நடைபெறுகிறது என்பது குறித்த தகவல்கள் வெளியிடப்படவில்லை. எனினும் விளாடிவோஸ்டோக்கில் உள்ள ரூஸ்கை தீவு முழுவதும் வடகொரியா மற்றும் ரஷியாவின் கொடிகள் காணப்படுவதால் அங்கு இருநாட்டு தலைவர்களின் சந்திப்பு நடைபெற அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

8 ஆண்டுகளுக்கு பிறகு ரஷியா மற்றும் வடகொரியா தலைவர்கள் இருவர் சந்தித்து பேச இருக்கிறார்கள். கடந்த 2011-ம் ஆண்டு வடகொரியாவின் முன்னாள் தலைவரும், கிம் ஜாங் அன்னின் தந்தையுமான கிம் ஜோங் இல் மற்றும் அப்போதைய ரஷிய அதிபர் டிமிட்ரி மெட்வடேவ் ஆகிய இருவரும் சந்தித்து பேசியது குறிப்பிடத்தக்கது.

Next Story