ரஷ்ய அதிபர் புதினுடன் வடகொரிய அதிபர் கிம் ஜாங் அன் சந்திப்பு


ரஷ்ய அதிபர் புதினுடன் வடகொரிய அதிபர் கிம் ஜாங் அன் சந்திப்பு
x
தினத்தந்தி 25 April 2019 5:01 AM GMT (Updated: 25 April 2019 5:01 AM GMT)

ரஷ்ய அதிபர் புதினை வடகொரிய அதிபர் கிம் ஜாங் அன் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.

மாஸ்கோ,

அணு ஆயுதம் மற்றும் கண்டம் விட்டு  கண்டம் பாயும் ஏவுகணை சோதனைகள் என உலக நாடுகளை மிரட்டி வந்த வடகொரியா கடந்த சில மாதங்களாக, தனது நிலைப்பாட்டில் இருந்து மாறியுள்ளது. அமெரிக்காவுடன் சமீபத்தில் நடைபெற்ற சந்திப்பு தோல்வி அடைந்ததால், மீண்டும் சக்தி வாய்ந்த ஆயுதம் ஒன்றை வடகொரியா சோதித்து பார்த்தது. இதனால், மீண்டும் தனது பழைய பாதைக்கே வடகொரியா திரும்பி விடுமோ என உலக நாடுகள் கவலைப்படும் சூழல் ஏற்பட்டது. 

இந்த நிலையில்,  வரலாற்றில் முதல் முறையாக ரஷிய அதிபர் புதினும், வடகொரியா தலைவர் கிம் ஜாங் அன்னும் சந்தித்து பேச முடிவு செய்யப்பட்டது. இந்த சந்திப்பு விரைவில் நடக்கும் என கூறப்பட்ட நிலையில், கிம் ஜாங் அன் நேற்று முன்தினம் ரெயிலில் ரஷியாவுக்கு புறப்பட்டு சென்றார்.

நீண்ட தூர பயணத்துக்கு பிறகு நேற்று காலை, அவரது ரெயில் ரஷியாவின் பசிபிக் துறைமுக நகரான விளாடிவோஸ்டோக்கில் உள்ள ஹசன் ரெயில் நிலையத்தை சென்றடைந்தது. அங்கு அவருக்கு ரஷிய அதிகாரிகள் உற்சாக வரவேற்பு அளித்தனர். கிம் ஜாங் அன்னை சந்திப்பதற்காக விளாடிவோஸ்டோக் நகருக்கு உள்ளூர் நேரப்படி இன்று புதினும் வருகை தந்தார். இதைத்தொடர்ந்து, இரு நாட்டு தலைவர்களும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த பேச்சுவார்த்தையின் போது, வடகொரியாவின் நேர்மறையான முயற்சிகளுக்கு ரஷ்யா முழு ஆதரவு அளிக்கும் என்று புதின் கிம் ஜாங் அன்னிடம் உறுதி அளித்தார்.

Next Story