பாகிஸ்தானில் தீவிரவாதிகள் உள்ளனர்; அந்நாட்டு ராணுவம் இன்று ஒப்புதல்


பாகிஸ்தானில் தீவிரவாதிகள் உள்ளனர்; அந்நாட்டு ராணுவம் இன்று ஒப்புதல்
x
தினத்தந்தி 29 April 2019 3:17 PM GMT (Updated: 29 April 2019 3:17 PM GMT)

பாகிஸ்தானில் தீவிரவாதிகள் உள்ளனர் என அந்நாட்டு ராணுவம் இன்று ஒப்பு கொண்டுள்ளது.

காஷ்மீரில் புல்வாமா மாவட்டத்தில் கடந்த பிப்ரவரி 14ந்தேதி துணை ராணுவ வீரர்கள் பயணம் செய்த வாகனங்களை குறிவைத்து பாகிஸ்தானை சேர்ந்த ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத அமைப்பினர் வெடிகுண்டுகள் நிரப்பிய காரை மோதி வெடிக்க வைத்தனர்.  இந்த  தாக்குதலில் 40 துணை ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

இந்த சம்பவத்தை தொடர்ந்து அந்நாட்டின் பாலகோட் பகுதிக்குள் புகுந்து அங்கிருந்த தீவிரவாதிகள் முகாமை இந்திய விமானப்படை குண்டுவீசி தாக்குதல் நடத்தி அழித்தது.

இதன்பின் பாகிஸ்தான் நாட்டில் இருந்து இந்திய வான்வெளிக்குள் பறந்து வந்த விமானங்களை இந்திய விமான படை விரட்டியடித்தது.  எனினும், புல்வாமாவில் தாக்குதல் நடத்தினோம் என அதற்கு பொறுப்பேற்று கொண்ட ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத அமைப்பு பாகிஸ்தானில் இல்லை என அந்நாட்டு அரசு கூறி வந்தது.

இந்நிலையில், பாகிஸ்தான் ராணுவத்தின் மக்கள் தொடர்பு பிரிவு இயக்குனர் ஜெனரல் ஆசிப் காபூர் செய்தியாளர்கள் சந்திப்பில் இன்று பேசும்பொழுது, பாகிஸ்தானில் தீவிரவாத அமைப்புகள் மற்றும் போராளி குழுக்கள் உள்ளன.  அவர்களுக்கு எதிராக நாங்கள் நடவடிக்கை எடுத்து வருகிறோம் என கூறினார்.

தீவிரவாதத்தினை கட்டுப்படுத்த நிறைய பணிகள் செய்ய வேண்டிய தேவை உள்ளது.  இதனால் இழப்புகளை சந்தித்து உள்ளோம்.  முந்தைய அரசு தீவிரவாதத்தினை கட்டுப்படுத்த தவறி விட்டது என்றும் அதனால் பாகிஸ்தான் கோடிக்கணக்கான மதிப்பிலான பணம் இழந்துள்ளது என்றும் அவர் ஒப்பு கொண்டுள்ளார்.

அந்நாட்டில் செயல்பட்டு வரும் தீவிரவாதிகளுக்கு எதிராக கடும் நடவடிக்கைகளை எப்பொழுது பாகிஸ்தான் அரசு எடுக்குமோ, அதன்பின்னரே அந்நாட்டுடன் பேச்சுவார்த்தை சாத்தியப்படும் என இந்தியா முன்பே தெளிவுப்படுத்தி இருந்தது.  இந்நிலையில், காபூரின் பேச்சு முக்கியத்துவம் பெறும் வகையில் அமைந்துள்ளது.

Next Story