பாதுகாப்பு குறித்த அச்சம் காரணமாக இலங்கையில் மே தின பேரணிகள் ரத்து


பாதுகாப்பு குறித்த அச்சம் காரணமாக இலங்கையில் மே தின பேரணிகள் ரத்து
x
தினத்தந்தி 1 May 2019 11:15 PM GMT (Updated: 1 May 2019 7:51 PM GMT)

பாதுகாப்பு குறித்த அச்சம் காரணமாக, இலங்கையில் மே தின பேரணிகள் ரத்து செய்யப்பட்டன.

கொழும்பு,

இலங்கையில் கடந்த 21–ந் தேதி ஈஸ்டர் பண்டிகையன்று தொடர் குண்டுவெடிப்பு தாக்குதல்கள் நடத்தப்பட்டன. இதையடுத்து, அவசர நிலை பிறப்பிக்கப்பட்டது. பயங்கரவாதிகளுடன் தொடர்புடையவர்களை பிடிப்பதற்காக நாடு முழுவதும் தேடுதல் வேட்டை நடந்து வருகிறது.

இந்நிலையில், நேற்று மே தினம் கொண்டாடப்பட்டது. வழக்கமாக, மே தினத்தன்று இலங்கையில் ஒவ்வொரு அரசியல் கட்சியின் சார்பிலும் பிரமாண்ட மே தின பேரணி நடத்தப்படுவது வழக்கம்.

ஆனால், இந்த ஆண்டு மே தின பேரணிகள் நடத்தப்படவில்லை. தொடர் குண்டுவெடிப்பு காரணமாக பாதுகாப்பு குறித்த அச்சம் நிலவுவதால், பேரணி நடத்துவதை அனைத்து அமைப்புகளும் கைவிட்டன.

அதிபர் சிறிசேனாவின் இலங்கை சுதந்திரா கட்சி கூட மே தின பேரணி நடத்தும் முடிவை கைவிட்டது. இதுபோல், தொழிலாளர் அமைப்புகளும் பேரணி நடத்தவில்லை. ‘‘அரங்கத்துக்குள்ளேயே உறுப்பினர்களை சந்திப்போம்’’ என்று இலங்கை மந்திரியும், ஐக்கிய தேசிய கட்சி பொதுச்செயலாளருமான அகிலா விராஜ் காரியவாசம் தெரிவித்தார்.

தலைநகர் கொழும்பு, பலத்த பாதுகாப்புடன் திகழ்கிறது. ஆங்காங்கே சாலை தடுப்புகள் வைத்து, வாகன சோதனை நடைபெற்று வருகிறது.

இதற்கிடையே, 28 வயது மற்றும் 32 வயதான 2 இந்திய வாலிபர்கள் உரிய விசா இல்லாத குற்றத்துக்காக கைது செய்யப்பட்டனர். வெலிக்கடை நகரில் உள்ள ராஜகிரியா பகுதியில் அவர்கள் தங்கி இருந்தனர். இலங்கை குடியேற்ற சட்டத்தை மீறியதற்காக அவர்கள் கைது செய்யப்பட்டனர். இதுபோல், வேறு நாட்டினர் சிலரும் பிடிபட்டனர்.

கடந்த வாரமும் இதுபோல், ஒரு இந்தியர் ‘விசா’ இல்லாமல் கைது செய்யப்பட்டார்.


Next Story