லண்டன் கோர்ட்டில் நிரவ் மோடியின் 3–வது ஜாமீன் மனு மீது 8–ந் தேதி விசாரணை


லண்டன் கோர்ட்டில் நிரவ் மோடியின் 3–வது ஜாமீன் மனு மீது 8–ந் தேதி விசாரணை
x
தினத்தந்தி 1 May 2019 11:45 PM GMT (Updated: 1 May 2019 8:02 PM GMT)

நிரவ் மோடியின் 3–வது ஜாமீன் மனு மீது லண்டன் கோர்ட்டில் 8–ந் தேதி விசாரணை நடக்கிறது.

லண்டன்,

பஞ்சாப் நே‌ஷனல் வங்கியின் மும்பை கிளை மூலம் சுமார் ரூ.13 ஆயிரம் கோடி அளவுக்கு கடன் பெற்று மோசடியில் ஈடுபட்ட பிரபல தொழில் அதிபர் நிரவ் மோடி (வயது 48) வெளிநாடுகளுக்கு தப்பி ஓடினார். அவரை கைது செய்வதற்கான நடவடிக்கையை மத்திய அரசு தீவிரப்படுத்தி வந்த நிலையில், கடந்த மார்ச் 19–ந்தேதி லண்டனில் ஸ்காட்லாந்து போலீசார் நிரவ் மோடியை கைது செய்தனர்.

தற்போது தென்மேற்கு லண்டனில் உள்ள வேண்ட்ஸ்வொர்த் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிரவ் மோடிக்கு வருகிற 24–ந்தேதி வரை நீதிமன்றக்காவல் நீட்டிக்கப்பட்டு உள்ளது. அவரை இந்தியாவுக்கு நாடு கடத்துவதற்கான வழக்கு லண்டன் வெஸ்ட்மின்ஸ்டர் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் விசாரிக்கப்பட்டு வருகிறது.

இந்த வழக்கில் தனக்கு ஜாமீன் கேட்டு நிரவ் மோடி ஏற்கனவே 2 முறை மனுத்தாக்கல் செய்தார். ஆனால் அவற்றை கோர்ட்டு நிராகரித்தது. இதில் 2–வது மனு கடந்த 26–ந்தேதி நிராகரிக்கப்பட்டு இருந்தது. இந்த வழக்கு விசாரணைக்காக அவர் சிறையில் இருந்தவாறே காணொலி காட்சி மூலம் ஆஜரானார்.

ஜாமீனுக்கு உத்தரவாத தொகையாக சுமார் ரூ.10 கோடி வரை செலுத்த நிரவ் மோடி தரப்பில் முன் வந்தும், அவரது மனுக்களை நீதிபதி நிராகரித்தார். மேலும் அவரது குடும்ப சூழல், செல்ல நாய்க்குட்டியின் நிலை உள்ளிட்ட பல்வேறு காரணங்களை காட்டியும் ஜாமீன் மறுக்கப்பட்டது.

நிரவ் மோடி கணிசமான தொகையை மோசடி செய்திருப்பதற்கான ஆதாரம் இருப்பதாகவும், அவரை வெளியில் விட்டால் மீண்டும் சரணடைவது கடினம் என்றும் நீதிபதி எம்மா அர்பத்னோட் தெரிவித்தார். அத்துடன் இந்த வழக்கின் சாட்சிகளுக்கு அவர் கொலை மிரட்டல் விடுப்பதாகவும் குற்றம் சாட்டினார்.

இவ்வாறு 2 முறை ஜாமீன் மனு நிராகரிக்கப்பட்டு உள்ள நிலையில் நிரவ் மோடி சார்பில் 3–வதாக மற்றொரு ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.

இந்த மனு வருகிற 8–ந்தேதி விசாரிக்கப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.


Next Story