புல்வாமா தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட மசூத் அசார் சர்வதேச பயங்கரவாதியாக அறிவிப்பு : ஐ.நா. சபை நடவடிக்கை


புல்வாமா தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட மசூத் அசார் சர்வதேச பயங்கரவாதியாக அறிவிப்பு : ஐ.நா. சபை நடவடிக்கை
x
தினத்தந்தி 2 May 2019 12:45 AM GMT (Updated: 1 May 2019 10:05 PM GMT)

புல்வாமா தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட ஜெய்ஷ் இ முகமது இயக்க தலைவர் மசூத் அசாரை, ஐ.நா. சபை சர்வதேச பயங்கரவாதியாக அறிவித்தது. இது இந்தியாவின் முயற்சிக்கு கிடைத்த வெற்றியாக கருதப்படுகிறது.

நியூயார்க், 

பயங்கரவாதிகளின் சொர்க்கபுரியாக திகழும் பாகிஸ்தானில் ஏராளமான உள்நாட்டு மற்றும் சர்வதேச பயங்கரவாத அமைப்புகள் இயங்கி வருகின்றன.

இதில் முன்னணியில் இருக்கும் அமைப்புகளில் ஜெய்ஷ்-இ-முகமது இயக்கமும் ஒன்று.

மசூத் அசார் என்ற கொடிய பயங்கரவாதியை தலைவராக கொண்ட இந்த அமைப்பு காஷ்மீரிலும், இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலும் கொடூர தாக்குதல்களை அவ்வப்போது அரங்கேற்றி வருகிறது. இதில் இந்திய நாடாளுமன்றம் மீது கடந்த 2001-ம் ஆண்டு நடத்தப்பட்ட தாக்குதல் ஜெய்ஷ்-இ-முகமதுவின் கோர முகத்தை உலகுக்கு காட்டியது.

பின்னர் 2008-ம் ஆண்டு மும்பையில் நடந்த தாக்குதலில் இந்த அமைப்பின் பங்களிப்பு இருப்பதாக கூறப்பட்ட நிலையில், 2016-ம் ஆண்டு பதன்கோட் விமானப்படை தளத்தில் நடந்த தாக்குதலுக்கு மசூத் அசாரின் ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பு பொறுப்பேற்றுக்கொண்ட போது அனைத்து தரப்பையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது.

இவ்வாறு இந்தியாவில் கொடிய தாக்குதல்களை நிகழ்த்தி அப்பாவி மக்களையும், பாதுகாப்பு படையினரையும் கொன்று குவித்து வந்த மசூத் அசாருக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு பாகிஸ்தானை இந்தியா தொடர்ந்து வலியுறுத்தி வந்தது. ஆனால் அது பயனற்று போனது.

எனவே பயங்கரவாதி மசூத் அசாரை சர்வதேச பயங்கரவாதியாக அறிவித்து அவர் மீது நடவடிக்கை எடுக்குமாறு சர்வதேச சமூகத்தை இந்தியா நாடியது. அதாவது ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் (1267 அல்கொய்தா பொருளாதார தடை கமிட்டி) மூலம் இதற்கான தடையை கொண்டுவர இந்தியா மனு செய்தது.

ஆனால் அங்கு இந்தியாவின் கோரிக்கைக்கு எதிரே வந்தது சீனா. இந்தியாவை எதிரியாகவும், பாகிஸ்தானை நண்பனாகவும் பார்த்து வரும் சீனா, மசூத் அசாருக்கு எதிராக இந்தியா சார்பில் தீர்மானம் கொண்டு வரும்போதெல்லாம் தனது ‘வீட்டோ’ அதிகாரத்தை பயன்படுத்தி அதை ரத்து செய்து வந்தது.

இதனால் மசூத் அசாருக்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாத நிலையில் இருந்த போதுதான், கடந்த பிப்ரவரி 14-ந்தேதி அந்த பயங்கரம் நிகழ்ந்தது. காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் துணை ராணுவ வீரர்கள் சென்ற வாகனங்களை குறிவைத்து மசூத் அசாரின் ஜெய்ஷ்-இ-முகமது இயக்கத்தை சேர்ந்த பயங்கரவாதி தற்கொலை தாக்குதலை அரங்கேற்றினான். இதில் 40 வீரர்கள் உடல் சிதறி பலியாகினர்.

பாகிஸ்தான் பயங்கரவாதிகளால் தொடர்ந்து தொல்லைகளை அனுபவித்து வரும் இந்தியாவின் நிலையை புல்வாமா தாக்குதல் உலக நாடுகளுக்கு எடுத்துக்காட்டியது. எனவே உடனடியாக களத்தில் இறங்கிய அந்த நாடுகள், புல்வாமா தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட மசூத் அசாரை ஐ.நா. மூலம் சர்வதேச பயங்கரவாதியாக அறிவிப்பது என திட்டமிட்டன.

அதன்படி புல்வாமா தாக்குதல் நடந்த சில நாட்களிலேயே பிரான்ஸ் தலைமையில் இங்கிலாந்து மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகள் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் மசூத் அசாருக்கு எதிரான தீர்மானத்தை தாக்கல் செய்தன. அவரை கருப்பு பட்டியலில் சேர்த்து தடை விதிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த தீர்மானத்தில் கூறப்பட்டு இருந்தது.

ஆனால் இந்த முறையும் சீனா தனது பிடிவாதத்தை தொடர்ந்தது. மசூத் அசாருக்கு எதிரான தீர்மானத்தை தனது வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தி நிறுத்தி வைத்தது. இந்த விவகாரத்தை ஆய்வு செய்ய கூடுதல் அவகாசம் தேவை எனக்கூறி தீர்மானம் நிறைவேறாமல் பார்த்துக்கொண்டது.

மசூத் அசாருக்கு எதிரான ஐ.நா. தீர்மானத்துக்கு சீனா முட்டுக்கட்டை போடுவது இது 4-வது முறையாகும். ஏற்கனவே 2009, 2016, 2017-ம் ஆண்டுகளிலும் இந்தியா மற்றும் உலக நாடுகள் மேற்கொண்ட முயற்சிகளுக்கு அந்த நாடு தடை போட்டு இருந்தது.

எனினும் இந்த முறை சீனாவின் இந்த முட்டுக்கட்டைக்கு அமெரிக்கா போன்ற நாடுகள் வெளிப்படையாக அதிருப்தி தெரிவித்தன. மசூத் அசாரை கருப்பு பட்டியலில் சேர்ப்பதற்கு அனைத்துவிதமான வழிகளும் ஆராயப்படும் என அமெரிக்கா அறிவித்தது. ஆனால் இந்த அறிவிப்பை விமர்சித்த சீனா, இந்த பிரச்சினையை முடிவுக்கு கொண்டுவர தீவிர நடவடிக்கை எடுக்கப்போவதாகவும் அறிவித்தது.

இந்த விவகாரத்தில் சீனாவை இறங்கிவர வைக்கும் முயற்சிகளில் இந்தியா ஈடுபட்டது. இது தொடர்பாக அந்த நாட்டு வெளியுறவு மந்திரி வாங் யி உள்ளிட்ட தலைவர்களுடன் மத்திய வெளியுறவு செயலாளர் விஜய் கோகலே கடந்த மாதம் பேச்சுவார்த்தை நடத்தினார். அத்துடன் அமெரிக்காவும் சீனாவுடன் சிலகட்ட பேச்சுவார்த்தைகளை நடத்தியது.

இதைத்தொடர்ந்து சீனா இறங்கி வந்தது. மசூத் அசாருக்கு தடை விதிக்கும் விவகாரத்தை ஆதரிப்பதாக கடந்த 30-ந்தேதி சீனா அறிவித்தது. அந்த நாட்டு வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் கெங் சுவாங் இது தொடர்பாக கூறுகையில், ‘ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் தடை பட்டியலில் மசூத் அசாரை சேர்க்கும் விவகாரத்தை நாங்கள் ஆதரிக்கிறோம். இது அனைத்து உறுப்பினர்களின் ஒருமனதான முடிவு என நம்புகிறேன்’ என்று தெரிவித்தார்.

இவ்வாறு சீனா தனது முட்டுக்கட்டையை விலக்கிக்கொண்டதை தொடர்ந்து, மசூத் அசாரை சர்வதேச பயங்கரவாதியாக ஐ.நா. அறிவித்து உள்ளது. உறுப்பு நாடுகளின் ஒருமித்த ஆதரவுடன் பாதுகாப்பு கவுன்சிலின் தடை கமிட்டி, இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.

இதை ஐ.நா.வுக்கான இந்தியாவின் தூதர் சையது அக்பருதீன் நேற்று உறுதி செய்தார். இது குறித்து அவர் தனது டுவிட்டர் தளத்தில் கூறுகையில், ‘பெரிய, சிறிய நாடுகள் அனைத்தும் ஒன்றிணைந்தன. மசூத் அசார் ஒரு சர்வதேச பயங்கரவாதியாக ஐ.நா.வின் தடை பட்டியலில் சேர்க்கப்பட்டு உள்ளார். இதற்கு ஆதரவளித்த அனைவருக்கும் நன்றி’ என்று குறிப்பிட்டு இருந்தார்.

மசூத் அசாரை சர்வதேச பயங்கரவாதியாக அறிவித்து கருப்பு பட்டியலில் சேர்க்கப்பட்டு இருப்பதன் மூலம் அவருக்கு எதிராக உலக நாடுகள் ஆயுதத்தடை, சர்வதேச பயணத்தடை, சொத்துக்கள் முடக்கம் நடவடிக்கைகளை எடுக்க முடியும். மேலும் அவரது இயக்கம் நிதி சேகரிப்பு போன்ற செயல்களில் ஈடுபடுவதற்கும் உடனடி தடை விதிக்கப்படும்.

ஐ.நா.வின் இந்த நடவடிக்கை, இந்தியாவின் ராஜதந்திர முயற்சிக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றியாக கருதப்படுகிறது.

மசூத் அசாருக்கு எதிராக ஐ.நா.வில் தீர்மானம் கொண்டு வந்திருந்த பிரான்ஸ் அரசு, இந்த நடவடிக்கையை வரவேற்று உள்ளது. மசூத் அசாருக்கு எதிராக பல ஆண்டுகளாக தூதரக ரீதியாக நடவடிக்கை எடுத்து வந்த நிலையில், தற்போதைய ஐ.நா.வின் முடிவு தங்கள் முயற்சிகளுக்கு கிடைத்த வெற்றியாகும் என அந்த நாட்டு வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் கூறியுள்ளார்.

Next Story