ரஷியாவில் பயங்கரம்: அவசரமாக தரையிறங்கிய போது விமானத்தில் தீப்பிடித்து 41 பேர் பலி


ரஷியாவில் பயங்கரம்: அவசரமாக தரையிறங்கிய போது விமானத்தில் தீப்பிடித்து 41 பேர் பலி
x
தினத்தந்தி 6 May 2019 1:07 AM GMT (Updated: 6 May 2019 7:59 PM GMT)

ரஷியாவில், அவசரமாக தரையிறங்கியபோது விமானத்தில் தீப்பிடித்ததில் 41 பேர் உடல் கருகி உயிர் இழந்தனர்.

மாஸ்கோ,

ரஷியா தலைநகர் மாஸ்கோவில் ஷெர்மெட்யேவ் சர்வதேச விமான நிலையம் உள்ளது. இங்கிருந்து நேற்று முன்தினம் மாலை உள்ளூர் நேரப்படி 6.02 மணிக்கு, ‘ஏரோபிளாட்’ நிறுவனத்துக்கு சொந்தமான ‘சுகோய் சூப்பர்ஜெட் 100’ ரக விமானம் முர்மான்க்ஸ் நகரத்துக்கு புறப்பட்டு சென்றது. விமானத்தில் 73 பயணிகளும், விமான ஊழியர்கள் 5 பேரும் இருந்தனர்.

விமானம் புறப்பட்டு பறக்க தொடங்கிய சில நிமிடங்களில், விமானத்தில் திடீர் கோளாறு ஏற்பட்டது. இதை அறிந்த விமானி, விமானத்தை மீண்டும் ஷெர்மெட்யேவ் விமானநிலையத்துக்கு திருப்பி, அவசரமாக தரையிறங்க அனுமதி கோரினார். விமானநிலைய கட்டுப்பாட்டு அதிகாரிகள் அனுமதி அளித்தனர்.

அதன்படி தரையிறங்கியபோது, விமானத்தின் ‘லேண்டிங் கியர்’ தரையில் வேகமாக மோதியதால் விமானத்தில் தீப்பிடித்தது. இதற்கிடையில் விமானம் விமானியின் கட்டுப்பாட்டை இழந்து, ஓடுபாதையில் வேகமாக சென்றது. இதனால் தீ வேகமாக பரவி விமானத்தின் பாதியளவுக்கு தீ சூழ்ந்தது.

விமானத்தில் கொழுந்துவிட்டு எரிந்த தீயால் அந்தப்பகுதி முழுவதும் கரும்புகை மண்டலம் சூழந்தது. ஒருகட்டத்துக்கு பின்னர் விமானி போராடி விமானத்தை நிறுத்திவிட்டார். அதனை தொடர்ந்து, விமானத்தின் முன்பகுதியில் உள்ள அவசர வழி மூலம் பயணிகளை விமான ஊழியர்கள் வெளியேற்றினர்.

எனினும் தீயின் வேகத்துக்கு அவர்களால் ஈடுகொடுக்க முடியவில்லை. எனவே, அனைத்து பயணிகளையும் அவர்களால் பத்திரமாக வெளியேற்ற முடியாமல் போனது. தீயின் கோரப்பிடியில் சிக்கி 2 குழந்தைகள், 2 விமான ஊழியர்கள் உள்பட 41 பேர் உடல் கருகி உயிரிழந்தனர்.

உயிர் தப்பிய 37 பேரில் 11 பேருக்கு லேசான காயங்கள் ஏற்பட்டது. அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். அவர்களில் 3 பேரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக தெரிகிறது.

இந்த விபத்து குறித்து அறிந்த ரஷிய அதிபர் விளாடிமிர் புதின், விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார்.

அதேபோல் இந்த விபத்தை பேரழிவு என கூறி வருத்தம் தெரிவித்துள்ள பிரதமர் டிமிட்ரி மெட்வடேவ், சிறப்பு விசாரணைக்குழுவை அமைத்து விபத்து தொடர்பாக விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளார்.

இதற்கிடையில் விமானத்தை மின்னல் தாக்கியதாலேயே அவசரமாக தரையிறக்கியதாகவும், இருந்தபோதும் விமானத்தில் தீப்பிடித்து விட்டதாகவும் விமானத்தை இயக்கிய விமானி தெரிவித்தார்.


Next Story