வடகொரியா செயல் யாருக்கும் மகிழ்ச்சி அளிக்கவில்லை: டொனால்டு டிரம்ப்


வடகொரியா செயல் யாருக்கும் மகிழ்ச்சி அளிக்கவில்லை: டொனால்டு டிரம்ப்
x
தினத்தந்தி 10 May 2019 7:43 AM GMT (Updated: 10 May 2019 7:43 AM GMT)

வடகொரியா செயல் யாருக்கும் மகிழ்ச்சி அளிக்கவில்லை என்று அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார்.

வாஷிங்டன்,

வடகொரிய அதிபர் கிம் ஜாங் அன், அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் கலந்து கொண்ட உச்சி மாநாடு வியட்நாம் தலைநகரம் ஹானோயில் கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்றது. இதில் இரு நாடுகளுக்கிடையே எந்த ஒப்பந்தமும்  எட்டப்படாமல் தோல்வியில் முடிந்தது.  இதைத்தொடர்ந்து ஏவுகணைத் தாக்குதலில் வடகொரியா ஈடுபட்டு வருவதால் கொரிய தீபகற்ப பகுதியில் பதற்றம் உருவாகியுள்ளது. 

இந்த நிலையில்,  வடகொரியாவின் வடக்கு  பகுதியில் குறைந்த தொலைவு செல்லக்கூடிய இரு ஏவுகணைகள் பரிசோதனை செய்யப்பட்டு உள்ளது எனவும், இவை 270 மற்றும் 420 கி.மீட்டர் தொலைவுக்கு பறந்து சென்றுள்ளன எனவும் தென்கொரியா தெரிவித்தது.  இதுபற்றி அமெரிக்கா மற்றும் தென்கொரியா ஆகிய இரு நாடுகளின் ராணுவத்தினர் கூட்டாக ஆய்வு செய்து வருகின்றனர்.  கடந்த ஒரு வாரத்திற்குள் 2வது முறையாக நடத்தப்படும் ஏவுகணை சோதனை என தென்கொரிய ராணுவம் தெரிவித்து உள்ளது.

இதுகுறித்து அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கூறும்போது, ''வடகொரியா நடத்தியுள்ள இரண்டு ஏவுகணை சோதனைகள் குறித்து அமெரிக்க அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். வடகொரியாவின் செயலால் யாரும் மகிழ்ச்சியடையவில்லை. என்ன நடக்கிறது என்று பொறுத்திருந்து பார்ப்போம். அவர்கள் பேச்சுவார்த்தை குறித்து பேசுகிறார்கள். ஆனால் அவர்கள் பேச்சுவார்த்தைக்குத் தயாரா என்று தெரியவில்லை'' என்று தெரிவித்தார். 

Next Story