இலங்கையின் சிலாபாத்தில் பதற்ற நிலை, பாதுகாப்பு அதிகரிப்பு; ஊரடங்கு உத்தரவு அமல்


இலங்கையின் சிலாபாத்தில் பதற்ற நிலை, பாதுகாப்பு அதிகரிப்பு; ஊரடங்கு உத்தரவு அமல்
x
தினத்தந்தி 12 May 2019 10:19 AM GMT (Updated: 12 May 2019 8:21 PM GMT)

இலங்கையின் சிலாபாத்தில் இருபிரிவினர் மோதல் காரணமாக பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.



இலங்கையில் ஈஸ்டர் தினத்தின் போது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்திய பின்னர் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு படைகள் உஷார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.  

இந்நிலையில் கிறிஸ்தவர்கள் அதிகமாக இருக்கும் சிலாபாத்தில் இஸ்லாமியர்களின் மசூதி மற்றும் சில கடைகள் தாக்கப்பட்டதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இச்சம்பவத்தை அடுத்து இருதரப்பு இடையே பதற்றம் காணப்பட்டது. உடனடியாக கூடுதல் பாதுகாப்பு படையினர் அழைக்கப்பட்டு நிலை சரியாக்கப்பட்டுள்ளது. நாளை காலை 6 மணி வரையில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.

இலங்கை கத்தோலிக்க சர்ச்சிகளின் கார்டினல் மால்கம் ரஞ்சித் வெளியிட்டுள்ள கோரிக்கை செய்தியில், "கத்தோலிக்க மற்றும் கிறிஸ்தவ சகோதர சகோதரிகள் இஸ்லாமிய சகோதரர்களை காயப்படுத்தக்கூடாது. அவர்கள் நம் சகோதரர்கள், அவர்கள் நமது மதகலாச்சாரத்தின் ஒரு பாகமாக இருக்கிறார்கள். அவர்களை தொந்தரவு செய்வதை தவிர்ப்பதுடன், இலங்கையில் அனைத்து சமூகங்களுக்கிடையில் நல்ல புரிந்துணர்வு மற்றும் நல்ல உறவுகளை உருவாக்க முயற்சி செய்யுங்கள்.” எனக் கேட்டுக்கொண்டுள்ளார். 
 
258 பேர் கொல்லப்பட்ட ஈஸ்டர் தாக்குதலை அடுத்து அதிபர் சிறிசேனா நாட்டு மக்களிடம் உரையாற்றிய போது, இஸ்லாமிய மக்களை தொடர்ந்து சந்தேகத்துடன் பார்ப்பதை தவிர்க்க வேண்டும் என பொதுமக்களுக்கு கோரிக்கை விடுத்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story