இலங்கைக்கு தேன்நிலவு சென்ற இந்திய பெண் சாவு - காரணம் என்ன? பரபரப்பு தகவல்கள்


இலங்கைக்கு தேன்நிலவு சென்ற இந்திய பெண் சாவு - காரணம் என்ன? பரபரப்பு தகவல்கள்
x
தினத்தந்தி 12 May 2019 11:15 PM GMT (Updated: 12 May 2019 8:53 PM GMT)

இங்கிலாந்தில் இருந்து இலங்கைக்கு தேன்நிலவு சென்ற இந்திய பெண் பலியான காரணம் குறித்து பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளன.

கொழும்பு,

இங்கிலாந்து தலைநகர் லண்டனில் வசித்து வந்தவர் இந்திய வம்சாவளி பெண் உஷிலா பட்டேல் (வயது 31). இவரும் லண்டனை சேர்ந்த செல்போன் கடை உரிமையாளரான சந்தாரியாவும் (33) ஒருவரை ஒருவர் காதலித்து வந்தனர்.

இருவீட்டாரின் சம்மதத்தோடு கடந்த மாதம் 19-ந்தேதி இருவரும் திருமணம் செய்துகொண்டனர். அதன் பின்னர் அவர்கள் தேன்நிலவுக்காக லண்டனில் இருந்து இலங்கைக்கு சென்றனர். அங்கு காலே நகரில் உள்ள நட்சத்திர ஓட்டல் ஒன்றில் இருவரும் அறை எடுத்து தங்கினர். இங்கு தங்கியிருந்து பல இடங்களை சுற்றிப்பார்த்து விட்டு, பின்னர் மாலத்தீவு செல்ல அவர்கள் திட்டமிட்டிருந்தனர்.

இந்த நிலையில் 25-ந்தேதி 2 பேருக்கும் திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. ரத்த வாந்தி மற்றும் கடும் காய்ச்சலால் அவதிப்பட்ட இருவரும் சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.

அங்கு சிகிச்சை பலனின்றி உஷிலா பட்டேல் பரிதாபமாக இறந்தார். உடலில் நீர்வறட்சி மற்றும் தொடர் வாந்தி காரணமாகவே உயிரிழப்பு ஏற்பட்டதாக பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது. தனது மனைவி இறப்புக்கு ஓட்டல் உணவு தான் காரணமென்றும் அவர்கள் அளித்த உணவில் ஏதோ துர்நாற்றம் வீசியதாகவும் சந்தாரியா கூறினார். ஆனால், ஓட்டல் நிர்வாகம் இதனை மறுத்துள்ளது.

இந்நிலையில் விசாரணை முடியும் வரை சந்தாரியாவை நாட்டுக்கு அனுப்ப இலங்கை அரசு மறுப்பு தெரிவித்துள்ளது. இந்த வழக்கு தொடர்பாக சந்தாரியா கைது செய்யப்படவோ அல்லது அவர் மீது குற்றச்சாட்டு பதிவு செய்யப்படவோ இல்லை என்றும், எனினும் விசாரணை முடியும் வரை அவர் இலங்கையில் தங்கி இருக்க வேண்டும் என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர்.


Next Story