இலங்கையில் வன்முறை : பெரும் பதற்றத்தால் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு


இலங்கையில் வன்முறை : பெரும் பதற்றத்தால் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு
x
தினத்தந்தி 13 May 2019 5:26 PM GMT (Updated: 13 May 2019 10:06 PM GMT)

இலங்கையில் பல்வேறு இடங்களில் நடைபெற்ற வன்முறை காரணமாக, நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு,

இலங்கையின் கொழும்பு நகரில் தேவாலயங்கள் மற்றும் நட்சத்திர ஓட்டல்களை குறிவைத்து கடந்த ஈஸ்டர் தினத்தன்று தற்கொலைப்படை தாக்குதல் நடத்தப்பட்டது. ஒரு பெண் உள்பட 9 பயங்கரவாதிகள் நடத்திய இந்த கொடூர தாக்குதலில் 250-க்கும் மேற்பட்டோர் பலியாகினர், 500-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

இந்த சம்பவத்துக்கு ஐ.எஸ். அமைப்பு பொறுப்பேற்று இருந்தாலும், இலங்கை அரசோ உள்ளூரை சேர்ந்த தேசிய தவ்ஹீத் ஜமாத் அமைப்பை குற்றம் சாட்டியது. எனவே அந்த அமைப்பை தடை செய்து, ஏராளமானோரை கைது செய்து  விசாரணை நடத்தி வருகிறது. தேவாலயங்கள் மீது நடத்தப்பட்ட குண்டுவெடிப்புகளால் இலங்கையின் பல பகுதிகளில் இரு பிரிவினர் இடையே ஒருவித பதற்றமான சூழல் நிலவி வருகிறது. எனவே இரு தரப்பும் அமைதி காக்குமாறு அதிபர் சிறிசேனா அறிவுறுத்தி வருகிறார்.

சமூக வலைத்தளத்தில் வெளியான ஒரு விரும்பத்தகாத பதிவை மையமாக வைத்து அந்நாட்டின் மேற்கு பகுதியில் அமந்துள்ள கடலோர நகரமான சிலாபம் நகரில் நேற்று முன்தினம் இருதரப்பினருக்கு இடையில் கலவரம் வெடித்ததால் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. அசம்பாவித சம்பவங்களை தடுக்க அங்கு கூடுதலாக போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். தேவையற்ற வதந்திகள் பரவாமல் இருக்க சமூக வலைத்தளங்களும் முடக்கி வைக்கப்பட்டுள்ளன.

முன்னதாக கொழும்பு அருகேயுள்ள புட்டாளம், குருநெங்களா மற்றும் கம்பகா ஆகிய இடங்களில் மட்டும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அங்கு பல இடங்களில் தாக்குதல் சம்பவங்கள் நடைபெற்றதால் மக்கள் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என்று அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் அந்த 3 மாவட்டங்களிலும் நாளை காலை 6 மணி வரைக்கும் ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும் என்றும், நாடு முழுவதும் இன்று இரவு 9 மணி முதல் நாளை அதிகாலை 4 மணி வரையில் ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும் என்றும் காவல் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே, “வதந்திகளை நம்ப வேண்டாம், பாதுகாப்புக்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டிருக்கிறோம்” என்று தெரிவித்துள்ளார்.

Next Story