அமெரிக்காவில் நடுவானில் இரு விமானங்கள் மோதல் 4 பேர் உயிரிழப்பு


அமெரிக்காவில் நடுவானில் இரு விமானங்கள் மோதல் 4 பேர் உயிரிழப்பு
x
தினத்தந்தி 14 May 2019 12:48 PM GMT (Updated: 14 May 2019 2:00 PM GMT)

அமெரிக்காவில் நடுவானில் இரு விமானங்கள் மோதி விபத்துக்குள்ளானதில் 4 பேர் உயிரிழந்தனர்.

அமெரிக்காவின் அலாஸ்கா மாகாணத்தில் உள்ள பிரபல சுற்றுலா தலமான கெட்சிகன் நகரில்  கடலிலும் தரையிறங்கும் வசதி கொண்ட சிறிய ரக கடல் விமானங்கள் மிகவும் பிரபலமானவை. கப்பலில் வரும் சுற்றுலாப் பயணிகளை இந்த வகை விமானங்கள் மூலம் அருகிலுள்ள சுற்றுலா தலங்களுக்கு அழைத்துச் செல்வது வழக்கமாக உள்ளது. அதன்படி கனடாவின் ‘ராயல் பிரின்சஸ்’ சொகுசு கப்பலில் வந்த சுற்றுலா பயணிகள் 2 கடல் விமானங்களில் அழைத்து செல்லப்பட்டனர்.

இதில் ஒரு விமானத்தில் 11 சுற்றுலா பயணிகளும், மற்றொரு விமானத்தில் 5 சுற்றுலா பயணிகளும் இருந்தனர். இரு விமானங்களும் பல்வேறு சுற்றுலா தலங்களுக்கு சென்றுவிட்டு, கெட்சிகன் நகருக்கு திரும்பி கொண்டிருந்தன.
அப்போது சற்றும் எதிர்பாராத வகையில் நடுவானில் இருவிமானங்களும் மோதின. இந்த கோரவிபத்தில் 11 பேருடன் சென்று கொண்டிருந்த முதல் விமானத்தில் ஒருவர் உயிர் இழந்தார். மற்ற 10 பேரும் பலத்த காயம் அடைந்தனர்.

அதே போல் மற்றொரு விமானத்தில் பயணம் செய்த 5 பேரில் 3 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். மேலும் 2 பேரை காணவில்லை. அவர்களின் கதி என்ன? என்பது தெரியவில்லை. தேடும் பணி நடக்கிறது. விபத்துக்கான காரணம் தெரியவரவில்லை. இது குறித்து விசாரணை நடந்து வருகிறது.

Next Story