கடைகள், வாகனங்களுக்கு தீவைப்பு: இலங்கை கலவரத்தில் ஒருவர் குத்திக்கொலை - 3 பயங்கரவாத இயக்கங்களுக்கு தடை


கடைகள், வாகனங்களுக்கு தீவைப்பு: இலங்கை கலவரத்தில் ஒருவர் குத்திக்கொலை - 3 பயங்கரவாத இயக்கங்களுக்கு தடை
x
தினத்தந்தி 14 May 2019 11:15 PM GMT (Updated: 14 May 2019 8:11 PM GMT)

இலங்கை கலவரத்தில் ஒருவர் பலியானார். கடைகள், வாகனங்களுக்கு தீவைக்கப்பட்டது. 3 பயங்கரவாத இயக்கங்களுக்கு அதிபர் சிறிசேனா தடை விதித்தார்.

கொழும்பு,

இலங்கையில் கடந்த மாதம் 21-ந் தேதி ஈஸ்டர் பண்டிகை தினத்தில் 3 தேவாலயங்கள், 3 ஓட்டல்கள் உள்ளிட்ட இடங்களில் மனித வெடிகுண்டு தாக்குதல்கள் நடத்தப்பட்டன. இதில், 250-க்கும் மேற்பட்டோர் பலியானார்கள். சம்பவம் தொடர்பாக ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதற்கிடையே, இந்த தாக்குதல் குறித்து ‘பேஸ்புக்’ சமூக வலைத்தளத்தில் ஒரு மதத்தை சேர்ந்தவர் தெரிவித்த கருத்தால், கடந்த ஞாயிற்றுக்கிழமை கலவரம் வெடித்தது. குறிப்பாக, வடமேற்கு மாகாணத்தில் வன்முறை சம்பவங்கள் அதிக அளவில் நடந்தன.

ஒரு பிரிவைச் சேர்ந்தவர்களின் கடைகள் மற்றும் வாகனங்களுக்கு மற்றொரு தரப்பினர் தீவைத்தனர். வழிபாட்டு தலங்கள், வீடுகள் ஆகியவை சூறையாடப்பட்டன. கலவரத்தை ஒடுக்க போலீசார் கண்ணீர்புகை குண்டுகளை வீசினர். வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். நாடு முழுவதும் இரவுநேர ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. சமூக வலைத்தளங்கள் முடக்கப்பட்டன.

இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு, இந்த கலவரத்தில் ஒருவர் கொல்லப்பட்டார். 45 வயதான அவர், புத்தளம் மாவட்டத்தில் தச்சு வேலைக்கான கடை நடத்தி வந்தார். அந்த கடைக்குள் ஒரு கும்பல் பயங்கர ஆயுதங்களுடன் புகுந்தது. அவரை சரமாரியாக ஆயுதங்களால் குத்திவிட்டு தப்பியது.

படுகாயம் அடைந்த அவர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி இறந்தார். இந்த தகவலை இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், மந்திரியுமான ரவுப் ஹக்கீம் தெரிவித்தார். நாடு முழுவதும் இரவுநேர ஊரடங்கு நேற்று தளர்த்தப்பட்டது. இருப்பினும், இக்கொலை நடந்த வடமேற்கு மாகாணத்தில் மட்டும் ஊரடங்கு நேற்றும் நீடித்தது. மறுஉத்தரவு வரும்வரை ஊரடங்கு நீடிக்கும் என்று போலீசார் தெரிவித்தனர்.

இலங்கை பிரதமர் ரனில் விக்ரமசிங்கே, நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். அப்போது, கலவரத்தை அடக்க ராணுவம் பணிக்கப்பட்டு இருப்பதாகவும், அமைதி திரும்ப பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.

அதுபோல், ராணுவ தளபதி மகேஷ் சேனநாயகே, கலவரத்தை தூண்டுவோர் மீது அதிகபட்ச பலப்பிரயோகம் செய்ய தயங்க மாட்டோம் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார். தலைமை போலீஸ் அதிகாரி சந்தனா விக்ரமரத்னே, கலவரக்காரர்களை அதிகபட்ச பலப்பிரயோகத்துடன் ஒடுக்குவோம் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதற்கிடையே, அதிபர் சிறிசேனா 3 பயங்கரவாத இயக்கங்களுக்கு தடை விதித்தார். தேசிய தவ்ஹீத் ஜமாத், ஜமாத்தே மில்லத்தே இப்ராகிம், வில்லயத் அஸ் செய்லானி ஆகிய இயக்கங்களுக்கு தடை விதித்துள்ளார். இந்த அறிவிப்பு, அரசிதழில் வெளியிடப்பட்டது.

மேலும், முப்படையினரை தவிர வேறு யாரும் ஆளில்லாத குட்டி விமானங்களை பறக்க விடுவதற்கும் சிறிசேனா தடை விதித்துள்ளார்.


Next Story