பாகிஸ்தானில் ஹபீஸ் சயீத்தின் உறவினர் கைது


பாகிஸ்தானில் ஹபீஸ் சயீத்தின் உறவினர் கைது
x
தினத்தந்தி 15 May 2019 9:01 AM GMT (Updated: 15 May 2019 9:01 AM GMT)

மும்பை பயங்கரவாத தாக்குதலுக்கு பின்னணியாக செயல்பட்ட ஹபீஸ் சயீத்தின் உறவினர் பாகிஸ்தானில் கைது செய்யப்பட்டார்.

லாஹூர்,

மும்பையில் கடந்த 2008ம் ஆண்டு பாகிஸ்தானை அடிப்படையாக கொண்ட லஷ்கர் இ தொய்பா என்ற பயங்கரவாத அமைப்பு தொடர்ச்சியாக 12 இடங்களில் துப்பாக்கி சூடு நடத்தியும், வெடிகுண்டு தாக்குதல்களிலும் ஈடுபட்டது.  இதில் 166 பேர் கொல்லப்பட்டனர்.

இந்த தாக்குதல்களுக்கு பின்னணியாக செயல்பட்டவர் ஹபீஸ் சயீத்.  கடந்த 2012ம் ஆண்டு அமெரிக்க கருவூல துறையானது சயீத் சர்வதேச குற்றவாளி என அறிவித்து, அவரை பற்றிய தகவல் அளிப்போருக்கு 1 கோடி அமெரிக்க டாலர் பரிசு வழங்கப்படும் என்றும் அறிவித்தது.

சயீத்தின் சகோதரர் அப்துல் ரஹ்மான் மக்கி.  ஜமாத் உத் தவா அமைப்பின் அரசியல் மற்றும் சர்வதேச விவகார தலைவராக இருந்து வருகிறார்.  அதன் தொண்டு அமைப்பு பலாஹ் இ இன்சேனியத்தின் பொறுப்பு அதிகாரியாகவும் இருந்து வருகிறார்.

மும்பை தீவிரவாத தாக்குதலை நடத்தியதற்கு பொறுப்பேற்ற லஷ்கர் இ தொய்பா இயக்கத்துடன் தொடர்புடைய அமைப்பு ஜமாத் உத் தவா என நம்பப்படுகிறது.  இதனால் கடந்த 2014ம் ஆண்டு லஷ்கர் இ தொய்பா அமைப்பினை வெளிநாட்டு பயங்கரவாத அமைப்பு என அமெரிக்கா அறிவித்தது.

இந்நிலையில் மக்கி, பாகிஸ்தான் அரசுக்கு எதிராக வெறுப்புணர்வுடன் பேசினார் என எழுந்த குற்றச்சாட்டை அடுத்து போலீசார் அவரை கைது செய்துள்ளனர்.

Next Story