இலங்கை போர் நிறைவுபெற்று 10 ஆண்டுகள்: பாதிக்கப்பட்ட ஈழத்தமிழர்களுக்கு இன்னும் நீதி கிடைக்கவில்லை


இலங்கை போர் நிறைவுபெற்று 10 ஆண்டுகள்: பாதிக்கப்பட்ட ஈழத்தமிழர்களுக்கு இன்னும் நீதி கிடைக்கவில்லை
x
தினத்தந்தி 18 May 2019 11:30 PM GMT (Updated: 18 May 2019 8:18 PM GMT)

இலங்கை போர் நிறைவுபெற்று 10 ஆண்டுகள் ஆகியும் பாதிக்கப்பட்ட ஈழத்தமிழர்களுக்கு இன்னும் நீதி கிடைக்கவில்லை.

கொழும்பு,

இலங்கையில் 1983-ம் ஆண்டில் இருந்து தமிழ் ஈழம் என்ற பெயரில் தனிநாடு கேட்டு ஆயுத போராட்டங்கள் தொடங்கின. இதில் 2007-ம் ஆண்டு வரை 70 ஆயிரம் பேர் கொல்லப்பட்டனர். விடுதலை புலிகளை ஒழிப்பதாக கூறி இலங்கை அரசு நடத்திய தாக்குதலில் அப்பாவி பொதுமக்களும் பலியானார்கள்.

2009-ம் ஆண்டு இலங்கை ராணுவத்துக்கும், விடுதலைப்புலிகளுக்கும் இடையேயான போர் உச்சகட்டத்தை அடைந்தது. இலங்கை ராணுவம் நடத்திய ஏவுகணை தாக்குதல் மற்றும் விமானங்களில் இருந்து வீசிய கொத்துக்குண்டுகளால் அப்பாவி பொதுமக்கள் கொன்று குவிக்கப்பட்டனர். இதில் பெண்களும், குழந்தைகளும் கூட தப்பவில்லை.

இலங்கை போரை நிறுத்த வேண்டும் என்று தமிழகத்தில் போராட்டங்கள் வெடித்தன. உலக நாடுகளில் உள்ள தமிழர்களும் இலங்கை போரை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தனர். அப்போது இலங்கைக்கு விஜயம் செய்த உலக செஞ்சிலுவை சங்க தெற்காசிய பொறுப்பு அதிகாரி, தனது சேவை காலத்தில் தான் கண்ட மிகமோசமான நரகம் இது என்று கூறும் அளவில் இந்த போர்க்காட்சிகள் இருந்தன.

இறுதியாக 2009-ம் ஆண்டு மே 18-ந் தேதி விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனை கொன்றுவிட்டதாக இலங்கை அரசு அறிவித்தது. இதைத்தொடர்ந்து போரும் முடிவுக்கு வந்தது. 30 ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்று வந்த இந்த போரில் குறைந்தபட்சம் ஒரு லட்சம் பேர் கொல்லப்பட்டனர். பல ஆயிரக்கணக்கானவர்கள் காணாமல் போயுள்ளனர்.

இறுதிக்கட்ட போரில் இலங்கை ராணுவத்தினரின் கண்மூடித்தனமான தாக்குதலால் 40 ஆயிரம் தமிழர்கள் கொல்லப்பட்டதாக ஐ.நா. அறிக்கை தெரிவித்தது.

இலங்கையின் போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் குறித்து சர்வதேச விசாரணை நடத்தி பாதிக்கப்பட்ட ஈழத்தமிழர்களுக்கு நீதி வழங்க வேண்டும் என்று உலக தமிழர்கள் குரல் கொடுத்தனர். ஐ.நா. கலப்பு விசாரணைக்கு பரிந்துரை செய்ததை முதலில் ஏற்றுக்கொண்ட இலங்கை அரசு பின்னர் மறுத்துவிட்டது.

போர் நிறைவு பெற்று 10 ஆண்டுகள் ஆகியும் இன்னும் பாதிக்கப்பட்டவர்களுக்கு இலங்கை அரசு நீதி வழங்கவில்லை என்று மனித உரிமை அமைப்புகள் குற்றம்சாட்டியுள்ளன. மனித உரிமை அமைப்பின் தெற்காசிய இயக்குனர் மீனாட்சி கங்குலி கூறியிருப்பதாவது:-

இலங்கை போர் நிறைவுபெற்றது, அந்நாட்டுக்கு சிதைந்த உயிர்கள் மற்றும் சமுதாயத்தை மறுகட்டமைப்பது மட்டுமின்றி உரிமைகள், சட்டத்தின் ஆட்சி ஆகியவற்றுக்கு உள்ள மரியாதையையும் மறுகட்டமைக்க ஒரு வாய்ப்பை வழங்கியது.

ஆனால் இந்த வாய்ப்பை இலங்கை அரசு வீணாக்கிவிட்டது. இருபக்கமும் நடைபெற்ற வன்முறைகள் பற்றி விசாரணை நடத்தவும், போர்க்குற்றங்களுக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும், பாதிக்கப்பட்டவர்களுக்கு நியாயம் மற்றும் இழப்பீடு வழங்கவும் தவறிவிட்டது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


Next Story