ஆப்கானிஸ்தானில் தொடர் வான்தாக்குதல்: தலீபான் தளபதி உள்பட 24 பயங்கரவாதிகள் பலி


ஆப்கானிஸ்தானில் தொடர் வான்தாக்குதல்: தலீபான் தளபதி உள்பட 24 பயங்கரவாதிகள் பலி
x
தினத்தந்தி 22 May 2019 11:15 PM GMT (Updated: 22 May 2019 8:11 PM GMT)

ஆப்கானிஸ்தானில் நடத்தப்பட்ட தொடர் வான்தாக்குதல்களில் தலீபான் தளபதி உள்பட 24 பயங்கரவாதிகள் பலியாகினர்.

காபூல், 

ஆப்கானிஸ்தானில் ஆட்சி நடத்தி வந்த தலீபான்களுக்கு எதிராக அமெரிக்கா போர் தொடுத்து, அவர்களை விரட்டி அடித்தது. ஆனால் குறுகிய காலத்திலேயே தலீபான்கள் அங்கு மீண்டும் காலூன்ற தொடங்கினர்.

தற்போது ஆப்கானிஸ்தானின் பல்வேறு பகுதிகளை தங்களின் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் தலீபான்கள், அரசுக்கு எதிராக பயங்கரவாதத்தை கட்டவிழ்த்துவிட்டு வருகின்றனர்.

நேட்டோ படை வீரர்களின் உதவியோடு ஆப்கான் வீரர்கள் தலீபான்களின் கொட்டத்தை ஒடுக்க போராடி வருகின்றனர்.

இதற்கிடையில் ஆப்கானிஸ்தானில் அமைதியை கொண்டுவரும் வகையில், அமெரிக்க அரசு தலீபான்களுடன் அமைதி பேச்சுவார்த்தையை முன்னெடுத்து வருகிறது.

இந்த பேச்சுவார்த்தையில் எவ்வித முன்னேற்றமும் ஏற்படாத நிலையில் ஆப்கானிஸ்தானில் பயங்கரவாத தாக்குதல்கள் தொடர்கின்றன.

அதே சமயம் தலீபான்களின் கொட்டத்தை ஒடுக்க ராணுவம் தீவிர முனைப்பு காட்டி வருகிறது. பயங்கரவாதிகளின் நிலைகளை குறிவைத்து தரைவழியாகவும், வான் வழியாகவும் அதிரடி தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில், ஹெல்மண்ட் மாகாணத்தில் உள்ள மர்ஜா மற்றும் சாங்கின் நகரங்களில் பயங்கரவாதிகளின் பதுங்கு குழிகள் மீது ஆப்கான் போர் விமானங்கள் தொடர் குண்டு மழை பொழிந்தன.

இந்த அதிரடி வான்தாக்குதலில் தலீபான் இயக்கத்தின் முக்கிய தளபதிகளில் ஒருவரான முல்லா ஹஸ்மா கொல்லப்பட்டார்.

மேலும் அவருடன் இருந்த பயங்கரவாதிகள் 15 பேரும் இந்த தாக்குதலில் பலியாகினர். அத்துடன் பயங்கரவாதிகளின் ஆயுத கிடங்குகள், பதுங்கு குழிகள் உள்ளிட்டவையும் நிர்மூலமாக்கப்பட்டன.

இதற்கிடையில் கோஸ்ட் மாகாணம் சபாரி மாவட்டத்தில் பதுங்கி இருந்த தலீபான் பயங்கரவாதிகளை குறிவைத்து வான்தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் 8 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.

அதே மாகாணத்தில் உள்ள சுரோபி மாவட்டத்தில் பாதுகாப்புபடை வீரர்கள் நடத்திய அதிரடி தேடுதல் வேட்டையில் 6 பயங்கரவாதிகள் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து ஏராளமான ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டன.


Next Story