உலகைச் சுற்றி...


உலகைச் சுற்றி...
x
தினத்தந்தி 24 May 2019 11:00 PM GMT (Updated: 24 May 2019 7:10 PM GMT)

* அமெரிக்க ராணுவ ரகசியங்களை திருடி இணையதளத்தில் கசியவிட்டது தொடர்பாக விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ்சே மீது புதிதாக 17 குற்றச்சாட்டுகளை அமெரிக்க நீதித்துறை பதிவு செய்துள்ளது.

* கனடாவின் அல்பெர்டா மாகாணத்தில் உள்ள வனப்பகுதியில் கடந்த இரு தினங்களாக தீப்பற்றி எரிந்து வருகிறது. சுமார் 97,000 ஹெக்டேர் பரப்பளவில் கொழுந்துவிட்டு எரியும் தீயை அணைக்கும் முயற்சியில் 300–க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டு வருகின்றனர். காட்டுத்தீ வேகமாக பரவி வருவதால் 5,000–க்கும் மேற்பட்ட மக்கள் அங்கிருந்து பத்திரமாக வெளியேற்றப்பட்டு வருகின்றனர்.

* தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் விளைவிப்பதாக கூறி சீனாவின் பன்னாட்டு தொலை தொடர்பு நிறுவனமான ஹூவாய் மீது அமெரிக்கா தடைகளை விதித்துள்ளது. இந்த நிலையில் சீனாவுடன் ஏற்படுத்தப்படும் வர்த்தக ஒப்பந்தத்தில் ஹூவாய் நிறுவனமும் இடம் பெறும் என அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் தெரிவித்துள்ளார்.

* அடுத்தடுத்து விபத்துகளில் சிக்கியதால் போயிங் 737 மேக்ஸ் ரக விமானங்களின் இயக்கத்தை சீன விமான நிறுவனங்கள் நிறுத்தின. இதற்கான மாற்று ஏற்பாடுகளை மேற்கொண்டதால் சீன நிறுவனங்கள் பெரும் இழப்பை சந்தித்ததாக கூறப்படுகிறது. எனவே இந்த இழப்பிற்காகவும், போயிங் 737 மேக்ஸ் ரக விமானங்களை வினியோகம் செய்வதில் ஏற்பட்ட தாமதத்திற்காகவும், 10 சீன விமான சேவை நிறுவனங்கள் போயிங் நிறுவனத்திடம் இழப்பீடு கோரியுள்ளன.

* ஈரானின் உரிமைகள் மதிக்கப்படாத வரை எந்த சூழ்நிலையிலும் அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்த வாய்ப்பு இல்லை என ஈரான் தெரிவித்துள்ளது. இதற்கிடையில் மத்திய கிழக்கு பகுதிக்கு கூடுதல் படைகள் அனுப்பப்படும் என அமெரிக்க ராணுவ தலைமையகம் தெரிவித்துள்ளது. 


Next Story