‘பேஸ்புக்’கில் 30 லட்சம் போலி கணக்குகள் நீக்கம்


‘பேஸ்புக்’கில் 30 லட்சம் போலி கணக்குகள் நீக்கம்
x
தினத்தந்தி 24 May 2019 11:30 PM GMT (Updated: 24 May 2019 7:44 PM GMT)

உலகம் முழுவதும் 200 கோடிக்கும் அதிகமானவர்கள் பயன்படுத்தும் சமூக வலைத்தளம் ‘பேஸ்புக்’.

நியூயார்க், 

‘பேஸ்புக்’ பயன்பாட்டாளர்களின் தகவல்கள் திருடப்படுவதாக சமீபகாலமாக தொடர் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டு வருகிறது.

அதேபோல் ‘பேஸ்புக்’கில் போலி கணக்குகளை உருவாக்கி தேவையற்ற மற்றும் பொய்யான செய்திகளை பரப்புவதும் வாடிக்கையாகி வருகிறது. இந்த பிரச்சினைகளுக்கு தீர்வுகாண ‘பேஸ்புக்’ நிறுவனம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

இந்த நிலையில், ‘பேஸ்புக்’கில் போலி கணக்குகளை உருவாக்குவோரின் எண்ணிக்கை பெருமளவில் அதிகரித்துள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அந்நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:–

கடந்த அக்டோபர் முதல் மார்ச் மாதம் வரை 30 லட்சம் போலி கணக்குகள் உருவாக்கப்பட்ட சில நிமிடங்களிலேயே கண்டறியப்பட்டு நீக்கப்பட்டுள்ளன. இது அதற்கு முந்தைய 6 மாதங்களில் நீக்கப்பட்ட போலி கணக்குகளைவிட 2 மடங்கு அதிகம் ஆகும்.

எனினும் தொடர்ச்சியாக லட்சக்கணக்கான போலி கணக்குகள் உருவாக்கப்படுவதால் அவற்றை கண்டறிந்து, நீக்க முடியாத நிலை உள்ளது.

கடந்த 6 மாதங்களில் வெறுப்புணர்வை பரப்பும் வகையிலும், விதிமுறைகளை மீறும் வகையிலும் இருந்த 73 லட்சம் பதிவுகள் நீக்கப்பட்டுள்ளன. இது அதற்கு முந்தைய 6 மாதங்களில் நீக்கப்பட்ட பதிவுகளை விட 54 லட்சம் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story