அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப்-மோடி சந்திப்பு : அடுத்த மாதம் ஜப்பானில் ‘ஜி–20’ மாநாட்டின் போது நடக்கிறது


அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப்-மோடி சந்திப்பு : அடுத்த மாதம் ஜப்பானில் ‘ஜி–20’ மாநாட்டின் போது நடக்கிறது
x
தினத்தந்தி 26 May 2019 12:30 AM GMT (Updated: 25 May 2019 6:56 PM GMT)

அடுத்த மாதம் ஜப்பானில் நடக்க உள்ள ‘ஜி–20’ உச்சி மாநாட்டின்போது அமெரிக்க ஜனாதிபதி டிரம்பை பிரதமர் நரேந்திர மோடி சந்தித்து பேசுகிறார்.

வாஷிங்டன், 

நாடாளுமன்ற தேர்தலில் பாரதீய ஜனதா கட்சி கூட்டணி, வரலாற்று சாதனை வெற்றி பெற்றுள்ளது. பிரதமராக நரேந்திர மோடி மீண்டும் பதவி ஏற்க உள்ளார்.

இதையொட்டி அவரை அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது அவர் பாரதீய ஜனதா கட்சி மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றி இருப்பதற்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டார்.

இதை வெள்ளை மாளிகையில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பின் போது டிரம்ப் தெரிவித்தார்.

அப்போது அவர் கூறும்போது, ‘‘ இந்திய பிரதமர் மோடியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினேன். தேர்தல் வெற்றிக்காக வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவித்தேன். நமது நாட்டின் சார்பிலும் வாழ்த்தினேன். அவர் தேர்தலில் மாபெரும் வெற்றியைப் பெற்றுள்ளார். அவர் எனது நண்பர். நாம் இந்தியாவுடன் மிகச்சிறப்பான உறவை கொண்டுள்ளோம்’’ என குறிப்பிட்டார்.

மேலும், ‘‘இந்திய மக்களுக்கு மோடி மிகப்பெரிய மனிதர்; மிகப்பெரிய தலைவர்’’ என டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் ஜப்பானில் உள்ள ஒசாகா நகரத்தில் அடுத்த மாதம் 28, 29 –ந் தேதிகளில் ‘ஜி–20’ உச்சி மாநாடு நடக்கிறது. இதில், அமெரிக்கா, இந்தியா, ஜப்பான் உள்ளிட்ட உலக நாடுகளின் தலைவர்கள் கலந்து கொள்ள இருக்கிறார்கள்.

இந்த உச்சி மாநாட்டின்போது பிரதமர் நரேந்திர மோடியும், அமெரிக்க ஜனாதிபதி டிரம்பும் சந்தித்து பேசுகின்றனர்.

இதை வாஷிங்டன் வெள்ளை மாளிகை அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.

இது தொடர்பாக வெளியிடப்பட்ட அறிக்கையில், ‘‘ஒசாகாவில் நடைபெற உள்ள ஜி–20 உச்சி மாநாட்டின்போது தலைவர்கள் ஒருவரை ஒருவர் சந்தித்து பேச ஆவலுடன் உள்ளனர். அப்போது அமெரிக்கா, இந்தியா, ஜப்பான் முத்தரப்பு சந்திப்பும், பேச்சு வார்த்தையும் நடக்க உள்ளது’’ என கூறப்பட்டுள்ளது.

இதில் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், இந்திய பிரதமர் நரேந்திர மோடி, ஜப்பான் பிரதமர் ஷின்ஜோ அபே ஆகிய மூவரும் ஒன்றாக சந்தித்து பேசுவர்.

அப்போது டிரம்பும், மோடியும் தனிப்பட்ட முறையில் சந்தித்து இரு தரப்பு உறவை வலுப்படுத்துவது பற்றி பேசுவார்கள் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.


Next Story