உலக செய்திகள்

காங்கோ நாட்டில் ஏரியில் படகு கவிழ்ந்து 30 பேர் பலி + "||" + A boat capsized in Congo, killing 30 people

காங்கோ நாட்டில் ஏரியில் படகு கவிழ்ந்து 30 பேர் பலி

காங்கோ நாட்டில் ஏரியில் படகு கவிழ்ந்து 30 பேர் பலி
காங்கோ நாட்டில் ஏரியில் படகு கவிழ்ந்த விபத்தில் சிக்கி 30 பேர் பலியாயினர்.
கின்ஷாசா,

மத்திய ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான காங்கோ நாட்டின் மேற்கு பகுதியில் உள்ள மாய் நேடம்போ மாகாணத்தின் தலைநகர் இனான்கோவில் மிகப்பெரிய ஏரி ஒன்று உள்ளது. இனான்கோவில் சாலை வசதிகள் சரிவர இல்லாததால் பெரும்பாலான மக்கள் படகு போக்குவரத்தையே பிரதானமாக கொண்டுள்ளனர்.


இந்த நிலையில், கடந்த சனிக்கிழமை இரவு இந்த ஏரியில் 300-க்கும் மேற்பட்ட பயணிகளுடன் படகு ஒன்று சென்றுகொண்டிருந்தது. இந்த படகில் 183 பேர் மட்டுமே அமர்ந்துசெல்ல அனுமதி உள்ள நிலையில், அளவுக்கு அதிகமான பயணிகளோடு, சரக்குகளையும் ஏற்றி சென்றுள்ளனர்.

இதனால் பாரம் தாங்காமல் படகு திடீரென ஏரியில் கவிழ்ந்தது. இதில் படகில் இருந்த அனைவரும் நீரில் மூழ்கினர். இந்த கோர விபத்தில் 12 பெண்கள், 11 குழந்தைகள் உள்பட 30 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிர் இழந்தனர். மேலும் 200-க்கும் மேற்பட்டோர் மாயமாகி உள்ளனர். அவர்களின் கதி என்ன? என்பது தெரியவில்லை.

இது குறித்து இனான்கோ நகர மேயர் சைமன் எம்பிவோ வெம்பா கூறுகையில், “படகு விபத்தில் பலியானதாக கூறப்படும் எண்ணிக்கை தற்காலிகமானதுதான். இது மேலும் அதிகரிக்கக்கூடும். பயணிகளின் சரியான எண்ணிக்கையையும் தெரிந்துகொள்வது தற்போது கடினமாக உள்ளது. எனினும் மாயமானவர்களை மீட்கும் முயற்சிகள் தொடர்ந்து நடக்கிறது” என கூறினார்.