ராணுவ ஆட்சி நடைபெறும் சூடானில் 9 மாதங்களுக்குள் தேர்தல் - இடைக்கால ராணுவ சபை அறிவிப்பு


ராணுவ ஆட்சி நடைபெறும் சூடானில் 9 மாதங்களுக்குள் தேர்தல் - இடைக்கால ராணுவ சபை அறிவிப்பு
x
தினத்தந்தி 4 Jun 2019 11:30 PM GMT (Updated: 4 Jun 2019 7:47 PM GMT)

ராணுவ ஆட்சி நடைபெற்று வரும் சூடானில் 9 மாதங்களுக்குள் தேர்தல் நடத்தப்படும் என இடைக்கால ராணுவ சபை அறிவித்துள்ளது.

கார்டூம்,

சூடானில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக அதிபராக பதவி வகித்து வந்தவர் ஓமர் அல் பஷீர். இனப்படுகொலை உள்ளிட்ட வழக்குகளில் இவருக்கு எதிராக சர்வதேச கோர்ட்டு பிடிவாரண்டு பிறப்பிக்கப்பட்டதை தொடர்ந்து, நாட்டில் மாபெரும் போராட்டம் வெடித்தது.

தொடர் போராட்டங்களுக்கு பிறகு அந்நாட்டு ராணுவம் அதிபர் ஓமர் அல் பஷீரை கைது செய்து, அவரை பதவியில் இருந்து நீக்கிவிட்டு ஆட்சியை கைப்பற்றியது. அதனை தொடர்ந்து, இடைக்கால ராணுவ சபை அமைக்கப்பட்டு அதன் தலைவராக அப்தல் பட்டா அல் பர்கான் பொறுப்பு ஏற்றார்.

ஆனால் ராணுவ ஆட்சியை விரும்பாத மக்கள் உடனடியாக மக்களாட்சியை கொண்டு வர வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து இடைக்கால ராணுவ சபையில் மக்கள் சார்பில் பிரதிநிதிகளை இணைத்து ஆட்சியை வழி நடத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.

இது தொடர்பாக இடைக்கால ராணுவ சபைக்கும், போராட்ட குழுவினருக்கும் இடையே பேச்சுவார்த்தை நடந்தது. ஆனால் இதில் எவ்வித முன்னேற்றமும் ஏற்படவில்லை. இதனால் மக்களாட்சியை வலியுறுத்தி போராட்டங்கள் தொடர்ந்தன.

இந்த போராட்டம் கடந்த சில நாட்களாக தீவிரமடைய தொடங்கியது. தலைநகர் கார்டூமில் உள்ள ராணுவ தலைமையகம் முன்பு கூடி மக்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். ராணுவம் பல முறை எச்சரிக்கை விடுத்தும் மக்கள் கலைந்து செல்லவில்லை.

இந்த நிலையில் நேற்று முன்தினம் போராட்டக்காரர்களை கலைந்துபோக செய்ய ராணுவம் துப்பாக்கிச்சூடு நடத்தியது. இதனால் அங்கு பெரும் கலவரம் வெடித்தது. ராணுவ வீரர்கள் துப்பாக்கியால் சுட்டதில் போராட்டக்காரர்கள் 30 பேர் பலியாகினர். மேலும் 100-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.

இந்த நிலையில் 9 மாதங்களுக்குள் நாட்டில் ஜனநாயக முறையில் தேர்தல் நடத்தப்படும் என்றும், அதுவரை காபந்து அரசாங்கம் ஆட்சியை வழிநடத்தும் என்றும் இடைக்கால ராணுவ சபை நேற்று அறிவித்தது. இடைக்கால ராணுவ சபையின் தலைவர் அப்தல் பட்டா அல் பர்கான் தொலைக்காட்சி வாயிலாக நாட்டு மக்களிடம் உரையாற்றியபோது இதனை தெரிவித்தார்.

இது பற்றி அவர் கூறுகையில், “சுதந்திரம் மற்றும் ஆட்சி மாற்றத்துக்காக போராட்டக்குழுவுடன் நடந்து வந்த பேச்சுவார்த்தை நிறுத்தப்படுகிறது. அடுத்த 9 மாதங்களுக்குள் நாட்டில் தேர்தல் நடக்கும் என்பதை தெரிவிக்கிறேன். இந்த இடைப்பட்ட காலத்தில் காபந்து அரசாங்கம் உருவாக்கப்பட்டு ஆட்சி நடத்தப்படும். இந்த காபந்து அரசாங்கத்தின் முக்கிய பணி, முந்தைய ஆட்சியில் ஊழல் செய்தவர்களை நீதியின் முன் நிறுத்துவது மற்றும் மக்கள் நேர்மையான முறையில் தங்கள் தலைவரை தேர்ந்தெடுக்க தேர்தலை நடத்துவது ஆகும்” என கூறினார்.


Next Story