100க்கும் மேற்பட்டோரை சாகடித்து விளையாடிய ஆண் நர்ஸ்


100க்கும் மேற்பட்டோரை சாகடித்து விளையாடிய ஆண் நர்ஸ்
x
தினத்தந்தி 6 Jun 2019 7:42 AM GMT (Updated: 6 Jun 2019 7:42 AM GMT)

ஜெர்மனியில் ஆண் நர்ஸ் ஒருவர் 100க்கும் மேற்பட்டோரை சாகடித்து விளையாடியுள்ளார்.

தமிழ் படமொன்றில் நடிகர் வடிவேலுவிடம், வாங்க.  செத்து செத்து விளையாடலாம் என நடிகர் முத்துக்காளை கூறுவது போன்று காட்சிகள் இருக்கும்.  ஆனால் ஜெர்மனியில் ஆண் நர்ஸ் ஒருவர் உண்மையில் நோயாளிகள் 100 பேரை சாகடித்து விளையாடியுள்ள அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.

ஜெர்மனி நாட்டில் ஆண் நர்சாக பணிபுரிந்து வந்தவர் நீல்ஸ் ஹீகெல் (வயது 42).  கடந்த 2000 மற்றும் 2005ம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் அவர் கிளினிக் மற்றும் மருத்துவமனை ஒன்றில் பணியாற்றியபொழுது, 100 நோயாளிகளை கொன்றிருப்பது தெரிய வந்துள்ளது.

இவர், நோயாளிகளை மரணத்தின் விளிம்பிற்கு கொண்டு சென்று விடுவார்.  எப்படி எனில், மாரடைப்பு ஏற்படுத்தும் வகையிலான மருந்துகளை கொண்டு ஊசி போட்டு விடுவார்.  இதற்காக அஜ்மலைன் என்ற மருந்தினை பயன்படுத்தி உள்ளார்.  இது தெரியாமல் சிறிது நேரத்திற்கு பின் நோயாளி துடிக்க ஆரம்பித்து விடுவார்.  பின்னர் அவரை மரணத்தில் இருந்து இயல்பு நிலைக்கு கொண்டு வரும் பணியில் நீல்ஸ் ஈடுபடுவார்.

சீருடை அணிந்து, ஒவ்வொரு அறையாக சென்று, யாருக்கும் தெரியாமல் இந்த பணிகளை செய்த நீல்ஸ் தொடர் கொலைகாரராக இருந்துள்ளார்.  

இவரால் காப்பாற்றப்படும் சிலருக்கு இவர் கடவுளாக இருந்துள்ளார்.  ஆனால் இந்த முயற்சியில் பெருமளவிலான நோயாளிகளின் உயிரை நீல்சால் காப்பாற்ற முடியாமல் போயுள்ளது.  கடந்த 2005ம் ஆண்டு வரை இவரது இந்த சேவை தொடர்ந்துள்ளது.  இதன்பின்பே சக பணியாளர்கள் இவரை பற்றி அறிந்து அதிர்ந்துள்ளனர்.

இதுபற்றிய வழக்கு விசாரணையில் இதுவரை 97 பேரை நீல்ஸ் கொலை செய்துள்ளார் என வழக்கறிஞர்கள் தரப்பு குற்றச்சாட்டு தெரிவித்துள்ளது.  மற்ற 3 வழக்குகளில் போதிய சான்றுகள் இல்லை.  இவர்களில் 55 பேரை கொலை செய்தது பற்றி விசாரணையில் நீல்ஸ் ஒப்பு கொண்டுள்ளார்.

நீதிமன்றத்தின் முன் ஆஜரான அவர் கூறும்பொழுது, கடந்த காலங்களில் நான் செய்ததற்காக நோயாளி ஒவ்வொருவரிடமும் உண்மையில் மன்னிப்பு கோரி கொள்ள விரும்புகிறேன் என கூறியுள்ளார்.  

இதற்கு முன் நடந்த விசாரணை ஒன்றில், நர்ஸ் பணியில் அலுப்பு தட்டியது.  வழக்கல்போல் பணியாற்றுவதில் சவால் எதுவும் இல்லை.  அதனால் பரவசம் ஏற்படுத்தும் பணியை மேற்கொள்ள முயன்றேன் என நீல்ஸ் கூறி அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளார்.

இந்த விசாரணை முடிவில், நீங்கள் மட்டுமே வெற்றி பெறும் மற்றும் அனைத்து நபர்களும் தோல்வி மட்டுமே அடைய கூடிய விளையாட்டு ஒன்றில் நோயாளிகளை பயன்படுத்தி உள்ளீர்கள் என நீதிபதி பர்மன் கூறியுள்ளார்.

Next Story