இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தும் என்று அச்சம் : பயங்கரவாத முகாம்களை பாகிஸ்தான் மூடியது


இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தும் என்று அச்சம் : பயங்கரவாத முகாம்களை பாகிஸ்தான் மூடியது
x
தினத்தந்தி 11 Jun 2019 12:00 AM GMT (Updated: 10 Jun 2019 9:26 PM GMT)

இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தும் என்ற அச்சத்தில் பயங்கரவாத முகாம்களை பாகிஸ்தான் மூடியது.

இஸ்லாமாபாத், 

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் பயங்கரவாத இயக்கங்கள் முகாம்கள் அமைத்து இருந்தன. இந்த முகாம்களை பயங்கரவாதிகள் இந்திய எல்லைக்குள் ஊடுருவவும், இந்திய எல்லையில் தாக்குதல்கள் நடத்தவும் பயன்படுத்தி வந்தனர். இந்நிலையில் பாலகோட் பகுதியில் இருந்த பயங்கரவாத முகாம்கள் மீது இந்திய ராணுவம் வான் தாக்குதல் நடத்தியது.

எல்லை கட்டுப்பாட்டு கோடு அருகே உள்ள பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் உள்ள பயங்கரவாத முகாம்களை அழிப்பதற்கு இந்தியா தொடர்ந்து முயற்சி எடுத்து வருகிறது. பாலகோட் தாக்குதலுக்கு பின்னர் எல்லை பகுதியில் எந்த ஊடுருவலும் நிகழவில்லை. கடந்த 2 மாதங்களாக இந்த நடவடிக்கைகள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டதில் இது தெரியவந்தது.

அதுமட்டுமின்றி பாகிஸ்தான் பகுதியில் உள்ள பயங்கரவாத முகாம்கள் பற்றிய தகவல் மற்றும் பதிவுகளை இந்திய அரசு சர்வதேச நாடுகளுக்கு தெரிவித்தது. அதில் முசாபராபாத் மற்றும் கோட்லி பகுதியில் தலா 5 பயங்கரவாத முகாம்கள், தர்னாலா பகுதியில் ஒரு முகாம் என 11 முகாம்கள் இருந்தது குறிப்பிடப்பட்டு இருந்தது.

இதைத்தொடர்ந்து சர்வதேச நாடுகளும் பாகிஸ்தான் அரசை அதன் மண்ணில் உள்ள பயங்கரவாத முகாம்களை அழிக்கும்படி வலியுறுத்தி வந்தன. அதோடு இந்திய ராணுவமும் மீண்டும் வான் தாக்குதல் நடத்தக்கூடும் என்ற அச்சம் காரணமாகவும் பயங்கரவாத முகாம்களை மூட பாகிஸ்தான் அரசு கடந்த சில மாதங்களாக நடவடிக்கை எடுத்தது.

கோட்லி, நிகியால் பகுதிகளில் இருந்த லஷ்கர் இ தொய்பா இயக்கத்தின் பயங்கரவாத முகாம்கள் மூடப்பட்டன. அதேபோல பாலா, டாக் பகுதிகளில் இருந்த ஜெய்ஷ் இ முகமது இயக்கத்தின் பயங்கரவாத முகாம்கள், கோட்லியில் இருந்த ஹிஸ்புல் முஜாகிதீன் இயக்கத்தின் முகாம் ஆகியவையும் மூடப்பட்டன.

இந்த 3 இயக்கங்களின் முகாம்களும் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் பத்திரிகைகள் செய்தி வெளியிட்டுள்ளன.


Next Story