உலக செய்திகள்

ஓமன் வளைகுடாவில் கண்ணி வெடி தாக்குதலில் 2 எண்ணெய் கப்பல்களில் தீ + "||" + A fire broke out in the 2 oil ships in Gulf of Oman

ஓமன் வளைகுடாவில் கண்ணி வெடி தாக்குதலில் 2 எண்ணெய் கப்பல்களில் தீ

ஓமன் வளைகுடாவில் கண்ணி வெடி தாக்குதலில் 2 எண்ணெய் கப்பல்களில் தீ
ஓமன் வளைகுடாவில் நிறுத்தப்பட்டிருந்த 2 எண்ணெய் கப்பல்களில் கண்ணி வெடி தாக்குதல் நடத்தப்பட்டதில் அந்த கப்பல்களில் தீப்பிடித்தது. அதில் இருந்த 44 சிப்பந்திகளும் பத்திரமாக மீட்கப்பட்டனர்.

அபுதாபி, 

ஐக்கிய அரபு அமீரகத்தில் ஓமன் வளைகுடா பகுதியில் அமைந்துள்ள புஜைரா துறைமுகம் மத்திய கிழக்கு பிராந்தியத்தில் முக்கிய பொருளாதார வழித்தடமாக திகழ்கிறது.

அரபுநாடுகளில் இருந்து கச்சா எண்ணெய் ஏற்றிச் செல்லும் அனைத்து நாடுகளின் சரக்கு கப்பல்களும் இந்த துறைமுகத்தை கடந்துதான் செல்லவேண்டும்.

ஈரான்-அமெரிக்கா இடையிலான மோதல் காரணமாக மத்திய கிழக்கு பிராந்தியத்தில் தொடர்ந்து பதற்றமான சூழல் நிலவுகிறது.

கடந்த மாதம் 11–ந் தேதி புஜைரா துறைமுகத்தில் நிறுத்தப்பட்டிருந்த சவுதி அரேபியாவின் 2 எண்ணெய் கப்பல்கள் உள்பட 4 வெளிநாட்டு கப்பல்கள் மீது நாசவேலை தாக்குதல்கள் நடத்தப்பட்டது.

கடல் கண்ணி வெடிகள் மூலம் இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாகவும், இதன் பின்னணியில் ஈரான் இருப்பதாகவும் அமெரிக்கா குற்றம் சாட்டியது.

சவுதி அரேபியாவும், சில மத்திய கிழக்கு நாடுகளும் ஈரான் மீது இதே குற்றச்சாட்டை முன்வைத்தன. ஆனால் ஈரான் இதனை திட்டவட்டமாக மறுத்தது.

இந்த நிலையில் புஜைரா துறைமுகத்தில் இருந்து 70 மைல் தொலைவில், பானமா நாட்டு கொடியுடன் ‘கோகுகா கரேஜியஸ்’ என்ற எண்ணெய் கப்பலும், நார்வே நாட்டுக்கு சொந்தமான ‘அல்டைர்’ என்ற எண்ணெய் கப்பலும் நிறுத்தப்பட்டிருந்தன.

நேற்று காலை இந்த 2 கப்பல்களிலும் அடுத்தடுத்து பயங்கர குண்டு வெடிப்பு நேரிட்டது. இதில் 2 கப்பல்களிலும் தீப்பிடித்தன. அபாய ஒலி எழுப்பப்பட்டது.

அதனை கேட்டு அந்த பிராந்தியத்தில் இருந்த அமெரிக்க கடற்படை உடனடியாக உதவிக்கு சென்றது. ‘கோகுகா கரேஜியஸ்’ கப்பலில் இருந்து 21 சிப்பந்திகளும், ‘அல்டைர்’ கப்பலில் இருந்து 23 சிப்பந்திகளும் பத்திரமாக மீட்கப்பட்டனர்.

சரக்கு கப்பல்களை குறிவைத்து கண்ணி வெடி தாக்குதல் நடத்தப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. எனினும் எந்த மாதிரியான தாக்குதல் நடத்தப்பட்டது என்பது பற்றி உறுதியான தகவல் வெளியாகவில்லை.

இது குறித்து தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. சரக்கு கப்பல்கள் மீது நடத்தப்பட்ட இந்த தாக்குதல் மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் பதற்றத்தை அதிகரிக்க செய்துள்ளது.


தொடர்புடைய செய்திகள்

1. எண்ணெய் கப்பலை அமெரிக்க கைப்பற்ற முயற்சி - ஈரான் குற்றச்சாட்டு
எண்ணெய் கப்பலை அமெரிக்க கைப்பற்ற முயன்றதாக ஈரான் குற்றம் சாட்டியுள்ளது.
2. ஆப்கானிஸ்தானில் கண்ணி வெடி தாக்குதலில் 9 பேர் பலி
ஆப்கானிஸ்தானில் நடந்த கண்ணி வெடி தாக்குதலில் 9 பேர் பலியாகினர்.