இலங்கை தாக்குதலில் தொடர்புடைய 5 பேரை ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாடு கடத்தியது


இலங்கை தாக்குதலில் தொடர்புடைய 5 பேரை ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாடு கடத்தியது
x
தினத்தந்தி 14 Jun 2019 9:50 AM GMT (Updated: 14 Jun 2019 9:50 AM GMT)

இலங்கை தாக்குதலில் தொடர்புடையவர்கள் என சந்தேகிக்கப்படும் 5 பேரை ஐக்கிய அரபு எமிரேட்ஸ் சொந்த நாட்டுக்கு கடத்தியுள்ளது.

இலங்கை தலைநகர் கொழும்புவில் ஏப்ரல் 21-ம் தேதி ஈஸ்டர் தினத்தின் போது தொடர் குண்டுவெடிப்பு தாக்குதல் கிறிஸ்தவ தேவாலயங்கள், நட்சத்திர ஓட்டல்களை குறிவைத்து நடத்தப்பட்டது. இதில் 258 பேர் கொல்லப்பட்டனர். இதனையடுத்து இலங்கை ராணுவம் மேற்கொண்ட அதிரடி நடவடிக்கையில் தாக்குதல் தொடர்பாக 100-க்கும் மேலானவர்களை கைது செய்தது. சிலர் ஐ.எஸ். பயங்கரவாத அமைப்புடன் தொடர்பில் இருந்ததாகவும் கைது செய்யப்பட்டனர். தேசிய தவ்ஹீத் ஜமாத் அமைப்புக்கு இலங்கை தடை விதித்தது.

இந்த அமைப்பை சேர்ந்தவர்கள் ஐ.எஸ். பயங்கரவாத அமைப்புடன் சமூக வலைதளங்களில் தொடர்பில் இருந்தது தொடர்பாக விசாரணையும் விஸ்தரிக்கப்பட்டது. இப்போது வழக்கு விசாரணை நாடு கடந்த அளவிற்கு செல்கிறது. இந்தியாவிலும் தேசிய புலனாய்வு பிரிவு விசாரணை மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில் தாக்குதலில் தொடர்புடையவர்கள் என சந்தேகிக்கப்படும் 5 பேரை ஐக்கிய அரபு எமிரேட்ஸ் சொந்த நாட்டுக்கு கடத்தியுள்ளது. 5 பேரும் ஐக்கிய அரபு எமிரேட்சில் இருந்து இலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர் என இலங்கை போலீஸ் தெரிவித்துள்ளது. சந்தேகத்திற்கு இடமானவர்களில் முகமது மில்ஹானும் ஒருவர். முகமது மில்ஹான் தடை செய்யப்பட்ட தேசிய தவ்ஹீத் ஜமாத் அமைப்பின் முக்கிய நபர் ஆவார். சந்தேகத்திற்கு இடமானவர்களை துபாயில் இலங்கை விசாரணை அதிகாரிகள் விசாரணைக்கு எடுத்துள்ளனர். பின்னர் இலங்கைக்கு கொண்டு வந்துள்ளனர். அவர்களிடம் விரிவான விசாரணை மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.

Next Story