புரோட்டோகாலை மீறும் வகையில் நடந்துகொண்ட பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான்


புரோட்டோகாலை மீறும் வகையில் நடந்துகொண்ட பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான்
x
தினத்தந்தி 14 Jun 2019 10:38 AM GMT (Updated: 14 Jun 2019 10:38 AM GMT)

ஷாங்காய் ஒத்துழைப்பு கூட்டமைப்பின் உச்சிமாநாட்டில், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் நெறிமுறைகளை மீறும் வகையில் நடந்துகொண்டுள்ளார் என சர்ச்சை எழுந்துள்ளது.

பாகிஸ்தான் ஆளும் கட்சியின் ட்விட்டர் பக்கத்தில் ஷாங்காய் ஒத்துழைப்பு கூட்டமைப்பு உச்சிமாநாட்டில் இம்ரான்கான் பங்கேற்ற வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. புரோட்டாகால் எனப்படும் நெறிமுறைகளை மீறும் வகையில் இம்ரான்கான் நடந்துகொண்டதும் அதில் பதிவாகியுள்ளது.

உச்சிமாநாட்டின் தொடக்க விழாவில் பங்கேற்க வந்த அரசுத் தலைவர்கள் நின்றபடி, அடுத்தடுத்து வரும் அரசுத் தலைவர்களுக்கு வரவேற்பு தெரிவித்தனர். ஆனால் இந்த நெறிமுறைக்கு மாறாக, இம்ரான்கான் நேராக சென்று தமது இருக்கையில் அமர்ந்து கொண்டார். சிறிதுநேரம் கழித்து அதை உணர்ந்தவராக எழுந்து நிற்கும் இம்ரான்கான் மீண்டும் இருக்கையிலேயே அமர்ந்து கொண்டார்.

அண்மையில், இஸ்லாமிய ஒத்துழைப்பு கூட்டமைப்பின் உச்சிமாநாட்டில் பங்கேற்க சவூதி அரேபியா சென்றபோதும் இம்ரான்கான் நெறிமுறைகளை மீறியதாக கண்டனம் எழுந்தது. சவூதி மன்னரிடம் பேசிய இம்ரான்கான், மன்னரை பார்த்து பேசாமல், அவரது மொழிபெயர்ப்பாளரிடம் பேசினார். மேலும் தான் கூறியதை மொழிபெயர்ப்பாளர் மன்னரிடம் எடுத்துரைப்பதற்கு முன்னரே இம்ரான்கான் விடுவிடுவென்று நடந்துசென்றுவிட்டார்.



Next Story