ஓமன் வளைகுடாவில் எண்ணெய் கப்பல்கள் மீது தாக்குதல்: ஈரான் மீது அமெரிக்கா நேரடி குற்றச்சாட்டு - வீடியோ ஆதாரத்தை வெளியிட்டது


ஓமன் வளைகுடாவில் எண்ணெய் கப்பல்கள் மீது தாக்குதல்: ஈரான் மீது அமெரிக்கா நேரடி குற்றச்சாட்டு - வீடியோ ஆதாரத்தை வெளியிட்டது
x
தினத்தந்தி 14 Jun 2019 11:15 PM GMT (Updated: 14 Jun 2019 8:25 PM GMT)

ஓமன் வளைகுடாவில் எண்ணெய் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தியது ஈரான் தான் என அமெரிக்கா நேரடியாக குற்றம் சுமத்தி உள்ளது. இதுதொடர்பாக வீடியோ ஆதாரம் ஒன்றை அமெரிக்க ராணுவம் வெளியிட்டுள்ளது.

வாஷிங்டன், 

ஈரான் உடனான அணுசக்தி ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா விலகியது முதல் இருநாடுகளுக்கும் இடையே கடுமையான மோதல் நீடித்து வருகிறது. இந்த விவகாரத்தில் வளைகுடா நாடுகள் அமெரிக்காவுக்கு பக்க பலமாக இருக்கின்றன. இந்த சூழலில் ஓமன் வளைகுடா பகுதியில் அயல்நாடுகளின் எண்ணெய் கப்பல்கள் தொடர் தாக்குதலுக்கு உள்ளாக்கப்படுகின்றன.

அந்த வகையில் நேற்று முன்தினம் ஓமன் வளைகுடாவில் உள்ள புஜைரா துறைமுகத்துக்கு அருகே நிறுத்தப்பட்டிருந்த 2 எண்ணெய் கப்பல்களை குறிவைத்து, கண்ணி வெடி தாக்குதல் நிகழ்த்தப்பட்டது. இதில் 2 கப்பல்களும் தீப்பிடித்து எரிந்தன. எனினும் கப்பல்களில் இருந்த சிப்பந்திகள் 44 பேரும் பத்திரமாக மீட்கப்பட்டனர்.

இந்த நிலையில், 2 எண்ணெய் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தியது ஈரான் தான், என அமெரிக்கா நேரடியாக குற்றம் சாட்டி உள்ளது. இதுகுறித்து அமெரிக்க வெளியுறவு மந்திரி மைக் பாம்பியோ கூறியதாவது:–

உளவுத்துறையின் தகவலின்படி ஈரான் தான் இந்த தாக்குதலை நடத்தி உள்ளது என்பதற்கு அமெரிக்காவிடம் வலுவான ஆதாரம் உள்ளது. தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்ட ஆயுதங்களையும், தாக்குதல் நடந்த விதத்தையும் பார்க்கிறபோது, இந்த பிராந்தியத்தில் ஈரானுக்கு மட்டுமே இதை செய்யக்கூடிய திறன் உள்ளது என்பது தெரிகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

ஆனால் அமெரிக்காவின் இந்த குற்றச்சாட்டு அடிப்படை ஆதாரமற்றது என கூறி ஈரான் திட்டவட்டமாக மறுத்துள்ளது. இது பற்றி ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:–

‘எண்ணெய் கப்பல்கள் தாக்கப்பட்ட விவகாரத்தில் ஈரான் மீது அமெரிக்கா அடிப்படை ஆதாரமின்றி குற்றம் சுமத்தி இருக்கிறது. இது ஈரானுக்கு எதிரான மற்றொரு பொய் பிரசாரமாக அமைந்துள்ளது. தாக்குதலுக்கு உள்ளான கப்பல்களுக்கு ஈரான் உதவியது. எங்களால் முயன்ற வகையில் அந்த கப்பலில் இருந்த குழுவை காப்பாற்றினோம்.

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில் மைக் பாம்பியோ அறிவுறுத்தலின் பேரில் ஐ.நா. சபைக்கான அமெரிக்க தூதரான ஜோனத்தான் கோகன் இந்த விவகாரம் குறித்து ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் குரல் எழுப்பினார். அதன் பேரில் ஓமன் வளைகுடாவில் எண்ணெய் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது தொடர்பாக விரிவான விசாரணை நடத்த ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் அழைப்பு விடுத்துள்ளது.

இந்த நிலையில் அமெரிக்காவின் குற்றச்சாட்டு அடிப்படை ஆதாரமற்றது என ஈரான் தெரிவித்த நிலையில், எண்ணெய் கப்பல்கள் தாக்கப்பட்டது தொடர்பாக அமெரிக்க ராணுவம் வீடியோ ஆதாரம் ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த வீடியோவில், தாக்குதலுக்கு உள்ளான ஒரு கப்பலில் இருந்து வெடிக்காத கண்ணி வெடிகளை ஈரான் சிறப்புபடையினர் அப்புறப்படுத்தும் காட்சிகள் இருக்கின்றன.

இந்த வீடியோ குறித்து ஈரான் உடனடியாக எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை.


Next Story