பயங்கரவாதத்துக்கு எதிராக ஒன்று சேர்ந்து போரிடுவோம் : ஷாங்காய் மாநாட்டில் பிரதமர் மோடி அழைப்பு


பயங்கரவாதத்துக்கு எதிராக ஒன்று சேர்ந்து போரிடுவோம் : ஷாங்காய் மாநாட்டில் பிரதமர் மோடி அழைப்பு
x
தினத்தந்தி 15 Jun 2019 12:09 AM GMT (Updated: 15 Jun 2019 12:09 AM GMT)

பயங்கரவாதத்துக்கு எதிராக அனைவரும் ஒன்று சேர்ந்து போரிடுவோம் என்று ஷாங்காய் மாநாட்டில் பிரதமர் மோடி அழைப்பு விடுத்தார்.

பிஷ்கேக், 

இந்தியா, சீனா, ரஷியா, பாகிஸ்தான், கஜகஸ்தான், கிர்கிஸ்தான், தஜிகிஸ்தான், உஸ்பெகிஸ்தான் ஆகிய 8 நாடுகளை உறுப்பினர்களாகக் கொண்டது ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு. இந்த அமைப்பின் 2 நாள் மாநாடு, கிர்கிஸ்தான் நாட்டின் தலைநகரான பிஷ்கேக் நகரில் நேற்று முன் தினம் (வியாழக்கிழமை) தொடங்கியது.

இந்த மாநாட்டில் கலந்துகொள்வதற்காக பிரதமர் நரேந்திர மோடி, நேற்று முன்தினம் பிஷ்கேக் சென்று அடைந்தார். அதைத் தொடர்ந்து, சீன அதிபர் ஜின்பிங்குடனும், ரஷிய அதிபர் புதினுடனும் பிரதமர் மோடி இரு தரப்பு உறவு உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து முக்கிய பேச்சு வார்த்தை நடத்தினார்.

இந்த நிலையில் ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் சீன அதிபர் ஜின்பிங், ரஷிய அதிபர் புதின், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் உள்ளிட்ட உறுப்பு நாடுகளின் தலைவர்கள் முன்னிலையில் பிரதமர் மோடி நேற்று பேசினார். பயங்கரவாதத்துக்கு எதிரான போர்தான் அவரது பேச்சில் முக்கிய இடம் பிடித்தது. இம்ரான்கான் முன்னிலையில் பாகிஸ்தானை மறைமுகமாக சாடினார்.

அவர் பேசுகையில் கூறியதாவது:-

கடந்த ஞாயிற்றுக்கிழமை (9-ந்தேதி) நான் இலங்கை பயணத்தின்போது, அங்குள்ள (கொழும்பு) புனித அந்தோணியார் தேவாலயத்துக்கு சென்றிருந்தேன். அப்போது அங்கு நான் பயங்கரவாதத்தின் கொடூர முகத்தைக் கண்டேன்.

ஒவ்வொரு மனிதாபிமான சார்பு சக்திகளும், அனைத்து நாடுகளும் தங்களுடைய கட்டுப்பட்ட களத்தில் இருந்து வெளியே வரவேண்டும். அனைவரும் ஒன்றிணைந்து பயங்கரவாதத்துக்கு எதிராக போரிட வேண்டும்.

பயங்கரவாதத்துக்கு எதிராக போரிடுவதற்கான வழிவகைகள் குறித்து விவாதிப்பதற்கு உலக அளவிலான ஒரு மாநாட்டை நடத்த வேண்டும் என்று இந்தியா விரும்புகிறது.

இவ்வாறு பிரதமர் மோடி கூறினார்.

ஒரு பக்கம் சமரச பேச்சு வார்த்தை நடத்த வருமாறு இந்தியாவுக்கு பாகிஸ்தான் அழைப்பு விடுத்துக்கொண்டு, மறுபக்கம் எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை ஊக்குவித்துக்கொண்டிருப்பதற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில்தான் பிரதமர் மோடி, இம்ரான்கானுடன் பேசுவதைத் தவிர்த்தார். எல்லை தாண்டிய பயங்கரவாதத்துக்கு பாகிஸ்தானை பொறுப்பேற்க வைக்க வேண்டும் என்று மறைமுகமாக சுட்டிக்காட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஷாங்காய் மாநாடு நேற்று நிறைவு பெற்றது. அப்போது உறுப்பு நாடுகளின் தலைவர்கள் அனைவரும் ஒன்றிணைந்து பிரகடனம் ஒன்றை வெளியிட்டனர்.

அதில், “பயங்கரவாதத்தை நியாயப்படுத்த முடியாது. அனைத்து வடிவிலான பயங்கரவாதத்துக்கும் கடும் கண்டனம் தெரிவிக்கிறோம். பயங்கரவாதத்துக்கு எதிராக போரிடுவதில் ஒத்துழைப்பை உலக நாடுகள் மேம்படுத்த வேண்டும்” என கூறப்பட்டுள்ளது. 

Next Story