ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்; 21 பேர் படுகாயம் - சுனாமி எச்சரிக்கையால் பரபரப்பு


ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்; 21 பேர் படுகாயம் - சுனாமி எச்சரிக்கையால் பரபரப்பு
x
தினத்தந்தி 19 Jun 2019 11:00 PM GMT (Updated: 19 Jun 2019 8:29 PM GMT)

ஜப்பானில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் சிக்கி 21 பேர் படுகாயம் அடைந்தனர். அங்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

டோக்கியோ,

ஜப்பானின் வடகிழக்கு பகுதியில் அமைந்துள்ள யமகட்டா நகரில் நேற்று முன்தினம் இரவு சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 6.7 புள்ளிகளாக பதிவானது. உள்ளூர் நேரப்படி இரவு 10.22 மணிக்கு ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் பூமிக்கு அடியில் 14 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்ததாக ஜப்பான் புவியியல் ஆய்வு மையம் தெரிவித்தது.

இந்த நிலநடுக்கம் சில வினாடிகள் நீடித்ததாக தெரிகிறது. அப்போது, வீடுகள், வணிகவளாகங்கள் உள்ளிட்ட கட்டிடங்கள் பயங்கரமாக குலுங்கின. இதனால் பீதியடைந்த மக்கள் அலறி அடித்துக்கொண்டு கட்டிடங்களை விட்டு வெளியேறினர். பின்னர் அவர்கள் வீதிகளிலும், திறந்தவெளி மைதானங்களிலும் தஞ்சம் புகுந்தனர்.

இந்த நிலநடுக்கமானது யமகட்டா அருகே உள்ள நிகாடா, இஷிகாவா, முராகாமி உள்ளிட்ட நகரங்களையும் உலுக்கியது. சக்திவாய்ந்த நிலநடுக்கத்தை தொடர்ந்து மேற்கூறிய நகரங்களில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

உயரமான அலைகள் எழக்கூடும் எனவும், எனவே மக்கள் கடலோர பகுதிகளில் இருந்து விலகி இருக்கும்படியும் எச்சரிக்கப்பட்டது.

எனினும் கடல் கொந்தளிப்புடன் காணப்பட்டபோதும், சுனாமி தாக்கவில்லை. இதையடுத்து 2½ மணி நேரத்துக்கு பிறகு சுனாமி எச்சரிக்கை திரும்பப்பெறப்பட்டது.

முன்னதாக நிலநடுக்கத்தின்போது, கட்டிடங்கள் குலுங்கியதால் நிலைதடுமாறி கீழே விழுந்ததில் 21 பேர் பலத்த காயம் அடைந்தனர். அவர்கள் அருகில் உள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.


Next Story