வடகொரியா சென்றார் சீன அதிபர் ஜி ஜின்பிங்


வடகொரியா சென்றார் சீன அதிபர் ஜி ஜின்பிங்
x
தினத்தந்தி 20 Jun 2019 3:10 AM GMT (Updated: 20 Jun 2019 3:10 AM GMT)

சீன அதிபர் ஜி ஜின்பிங் 2 நாள்கள் பயணமாக வடகொரியா சென்றார். கிம் ஜாங் அன்னுடன் முக்கிய விஷயங்கள் குறித்து பேச்சு வார்த்தை நடத்த உள்ளார்.

பெய்ஜிங்,

சீன அதிபர் ஜி ஜின்பிங் , 2 நாள்கள் பயணமாக வடகொரியா சென்றார்.  வடகொரியா போன்ற தனிமைப்படுத்தப்பட்ட நாட்டிற்கு கடந்த 14 ஆண்டுகளில் பயணம் செய்துள்ள  முதல் சீன அதிபர் ஜி ஜின்பிங்தான். வடகொரிய தலைநகர் பியாங்யாங் சென்றடைந்த சீன அதிபர் ஜி ஜின்பிங்கிற்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. 

 சீன அதிபர் வருகையையொட்டி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.  ஜி 20 மாநாட்டில் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பை, ஜி ஜின்பிங்க் சந்திக்க உள்ள நிலையில், கிம் ஜாங் அன்னை சந்தித்து, ஜி ஜின்பிங் பேசுவது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக எதிர்பார்க்கப்படுகிறது. பொருளாதார விஷயங்கள் குறித்தும் இரு தலைவர்களும் பேசக்கூடும் என்று கூறப்படுகிறது. வடகொரியாவின் மிகப்பெரும் வர்த்தக கூட்டாளியாக சீனா மட்டுமே உள்ளது. 

இப்பயணம் குறித்து  சீன அதிபர் ஜி ஜின்பிங் கூறும்போது, ''வடகொரியாவுடன்  பேச்சுவார்த்தை மற்றும் ஒருங்கிணைப்பை வலுப்படுத்துவதன் மூலம் கொரிய தீபகற்பகத்தில் அமைதி, ஸ்திரத்தன்மை, வளர்ச்சிக்கு சீனா தீவிரமான பங்களிப்பை அளிக்க முடியும்'' என்றார்.

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்- வடகொரிய அதிபர் கிம் ஜாங் அன் இடையே, கடந்த பிப்ரவரி மாதம் வியட்நாமின் ஹனோய் நகரில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததையடுத்து வடகொரியா மீண்டும் ஏவுகணை சோதனையில் ஈடுபட்டு வருகிறது.

Next Story