பிரான்சில் வரலாறு காணாத வெப்பம்; 114.6 டிகிரி பதிவு - கடற்கரையில் மக்கள் தஞ்சம்


பிரான்சில் வரலாறு காணாத வெப்பம்; 114.6 டிகிரி பதிவு - கடற்கரையில் மக்கள் தஞ்சம்
x
தினத்தந்தி 29 Jun 2019 4:53 AM GMT (Updated: 29 Jun 2019 8:52 PM GMT)

ஐரோப்பிய நாடுகளில் கடுமையான வெப்பம் நிலவுகிறது. பிரான்சில் வரலாறு காணாத வெப்ப நிலை பதிவாகியுள்ளது.

பாரீஸ்,

ஐரோப்பிய நாடுகளில் இப்போது கோடை வெயில் சுட்டெரித்து வருகிறது. அனல் காற்று வீசுகிறது.

பிரான்ஸ் நாட்டில் வரலாறு காணாத வகையில் வெயில் கொளுத்துகிறது. அந்த நாட்டின் தெற்கு பகுதியில் உள்ள காலர்கியுஸ் லே மான்டியூக்ஸ் கிராமத்தில் இதுவரை இல்லாத வகையில் நேற்று முன்தினம் 114.6 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவாகி உள்ளது.

இதையொட்டி அந்த ஊர் மேயர் பிரெட்டி செர்டா கூறும்போது, “இந்த வெயிலை சமாளித்துத்தான் ஆக வேண்டியதிருக்கிறது. நமது எதிர்காலம் இனி இதுதான். மறந்து விடாதீர்கள். பிரான்சின் தெற்கு பகுதி, வெப்ப மண்டலமாக மாறப்போகிறது” என குறிப்பிட்டார்.

வறுத்தெடுத்த வெயில் காரணமாக நேற்று முன்தினம் அங்கு நூற்றுக்கணக்கான பள்ளிக்கூடங்கள் மூடப்பட்டன.

இதற்கு முன்பு பிரான்சில் 2003-ம் ஆண்டு அதிகபட்சமாக 111.38 டிகிரி பாரன்ஹீட் பதிவானது. அந்த வெயிலில் கடும் அனல் காற்று வீசி ஆயிரக்கணக்கானோர் பலியாகினர்.

இப்போது கடலோர நகரங்களில் வசிக்கிற மக்கள் கடலுக்கு சென்று குளித்தும், கடற்கரையில் கூடாரங்கள் அமைத்து படுத்துக்கிடந்தும் வெப்பத்தை தணித்து வருகின்றனர்.


Next Story