அமெரிக்கா-சீனா மீண்டும் வர்த்தக பேச்சு: டிரம்ப், ஜின்பிங் சந்திப்பில் முடிவு


அமெரிக்கா-சீனா மீண்டும் வர்த்தக பேச்சு: டிரம்ப், ஜின்பிங் சந்திப்பில் முடிவு
x
தினத்தந்தி 29 Jun 2019 10:30 PM GMT (Updated: 29 Jun 2019 8:24 PM GMT)

அமெரிக்கா-சீனா மீண்டும் வர்த்தக பேச்சு நடத்த உள்ளதாக, டிரம்ப், ஜின்பிங் சந்திப்பில் முடிவு செய்யப்பட்டது.

ஒசாகா,

உலகின் இரு பெரும் வல்லரசுகளான அமெரிக்காவும், சீனாவும் கடந்த ஓராண்டு காலமாக வர்த்தக போரில் ஈடுபட்டு வருகின்றன. அமெரிக்காவின் அறிவுசார் சொத்துகளையும், தொழில்நுட்பங்களையும் சீனா திருடி தனது வர்த்தகத்துக்கு பயன்படுத்துகிறது என்பது ஜனாதிபதி டிரம்பின் குற்றச்சாட்டு. இதை சீனா மறுத்தாலும், டிரம்ப் சீனப் பொருட்களுக்கு அதிரடியாக கூடுதல் வரிகளை விதித்தார். சீனாவும் பதிலடியாக அமெரிக்க பொருட்களுக்கு கூடுதல் வரி விதித்தது. இரு தரப்பும் பேச்சு வார்த்தை நடத்தியும் பலன் இல்லை.

சீனாவுக்கு மேலும் 300 பில்லியன் டாலர் (சுமார் ரூ.21 லட்சம் கோடி) வரிகள் விதிக்கப்போவதாக கூறி டிரம்ப் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருந்தார்.

இந்த நிலையில் ஜப்பான் நாட்டின் ஒசாகா நகரில், ஜி-20 உச்சி மாநாட்டின் இடையே டிரம்பும், சீன அதிபர் ஜின்பிங்கும் சந்தித்து பேசினர். இந்த பேச்சு வார்த்தை மிக சிறப்பாக அமைந்தது என டுவிட்டரில் டிரம்ப் தெரிவித்தார்.

இந்த சந்திப்பின்போது, மீண்டும் இரு தரப்பு வர்த்தக பேச்சு வார்த்தையை நடத்த டிரம்பும், ஜின்பிங்கும் முடிவு செய்தனர். இதுபற்றி குறிப்பிட்ட டிரம்ப், தற்போதைக்கு சீனப்பொருட்கள் மீது கூடுதல் வரி விதிக்க மாட்டோம் என்று கூறினார்.

மேலும் சீனாவின் ஹூவாய் நிறுவனத்துக்கு பாதுகாப்பு காரணங்களையொட்டி அமெரிக்க நிறுவனங்கள் பொருட்களை விற்பனை செய்ய விதித்திருந்த தடையை டிரம்ப் விலக்கிக்கொண்டுள்ளார். அமெரிக்க நிறுவனங்கள், ஹூவாய் நிறுவனத்துக்கு பொருட்களை தொடர்ந்து விற்பனை செய்யலாம் என அவர் அறிவித்துள்ளார்.


Next Story