ஆப்கானிஸ்தான் போர் முடிவுக்கு வருமா? அமெரிக்கா-தலீபான்கள் சமரச பேச்சு கத்தாரில் தொடங்கியது


ஆப்கானிஸ்தான் போர் முடிவுக்கு வருமா? அமெரிக்கா-தலீபான்கள் சமரச பேச்சு கத்தாரில் தொடங்கியது
x
தினத்தந்தி 30 Jun 2019 11:30 PM GMT (Updated: 30 Jun 2019 8:33 PM GMT)

கத்தார் நாட்டில் அமெரிக்காவுக்கும், தலீபான் பயங்கரவாதிகளுக்கும் இடையேயான சமரச பேச்சு தொடங்கியது. இதில் திருப்பம் ஏற்படுமா, ஆப்கானிஸ்தான் போர் முடிவுக்கு வருமா என்ற கேள்விகள் எழுந்துள்ளன.

இஸ்லாமாபாத்,

அமெரிக்காவில் நியூயார்க் உலக வர்த்தக மையம், வாஷிங்டன் பென்டகன் ராணுவ தலைமையகம் ஆகியவற்றின்மீது பின்லேடனின் அல்கொய்தா பயங்கரவாதிகள் விமானங்களை மோதி வரலாறு காணாத தாக்குதல்களை நடத்தி 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரை கொன்று குவித்தனர்.

2001-ம் ஆண்டு செப்டம்பர் 11-ந் தேதி நடந்த அந்த தாக்குதல்களை தொடர்ந்து, அல்கொய்தா பயங்கரவாதிகளுக்கு தஞ்சம் அளித்து வந்த ஆப்கானிஸ்தான்மீது அமெரிக்கா போர் தொடுத்து அங்கு ஆட்சியில் இருந்த தலீபான்களை அகற்றியது.

ஆனால் தலீபான் பயங்கரவாதிகளை முற்றிலும் ஒழிக்க முடியவில்லை. 18 ஆண்டுகளாக தலீபான் பயங்கரவாதிகளை ஒடுக்கும் முயற்சியில் ஆப்கானிஸ்தான் அரசு படைகளும், அமெரிக்கா மற்றும் நேட்டோ படைகளும் ஈடுபட்டும் பலன் இல்லை.

இந்த நிலையில்தான் சமரச பேச்சு பற்றிய கேள்வி எழுந்தது. ஆப்கானிஸ்தான் அரசு நேரடி பேச்சுவார்த்தைக்கு தலீபான் பயங்கரவாதிகளை அழைத்தது. ஆனால் அவர்களோ அமெரிக்காவுடன்தான் பேச்சுவார்த்தை நடத்துவோம் என திட்டவட்டமாக கூறினர். ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகளை முழுமையாக விலக்கிகொள்ளும் வரையில் தாக்குதல்களை நிறுத்த மாட்டோம் எனவும் அறிவித்தனர்.

அதைத்தொடர்ந்து அமெரிக்காவுக்கும், தலீபான் பயங்கரவாதிகளின் பிரதிநிதிகளுக்கும் இடையே சமரச பேச்சுவார்த்தை தொடங்கியது.

6 சுற்று பேச்சுவார்த்தை முடிந்தும் திருப்பம் ஏதும் நிகழவில்லை.

இந்த நிலையில் 7-வது சுற்று பேச்சுவார்த்தை கத்தார் நாட்டின் தலைநகரான டோஹாவில் நேற்று முன்தினம் தொடங்கியது.

செப்டம்பர் 1-ந் தேதிக்குள் ஆப்கானிஸ்தான் போரை முடிவுக்கு கொண்டு வந்து விட வேண்டும், அதற்கான ஒப்பந்தத்தை ஏற்படுத்தி விட முடியும் என அமெரிக்க வெளியுறவு மந்திரி மைக் பாம்பியோ நம்பிக்கை வெளியிட்டுள்ள சூழலில் பேச்சுவார்த்தை தொடங்கி இருக்கிறது. இந்தப் பேச்சுவார்த்தை, அடுத்த வாரம் வரை தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதையொட்டி வாஷிங்டன் அமைதி தூதர் ஜல்மே கலீல்ஜாத் செய்தி நிறுவனம் ஒன்றுக்கு நேற்று பேட்டி அளித்தார்.

அப்போது அவர், “அமெரிக்காவுக்கும், தலீபான்களுக்கும் இடையேயான 7-வது சுற்று சமரச பேச்சுவார்த்தை முக்கியமானது” என கூறினார்.

மேலும், “இரு தரப்பினரும் உறுதியான முடிவுகளை எதிர்பார்க்கிறார்கள். ஏனென்றால், ஆப்கானிஸ்தானில் இருந்து 20 ஆயிரம் அமெரிக்கா மற்றும் நேட்டோ படை வீரர்களை திரும்பப்பெறுவதையும், அமெரிக்காவின் நீண்டகால போரை முடிவுக்கு கொண்டுவரவும் உடன்பாடு ஏற்படுத்த முயற்சிக்கின்றனர்” என்றார்.

ஆப்கானிஸ்தானில் வரும் செப்டம்பர் மாதம் 28-ந் தேதி அதிபர் தேர்தல் நடக்க உள்ளது.

அதற்கு முன்னதாக போரை முடிவுக்கு கொண்டு வந்து விட வேண்டும் என்ற முனைப்பில் அமெரிக்கா உள்ளது.

இதற்கு இந்த 7-வது சுற்று பேச்சுவார்த்தை பலன் அளிக்குமா, திருப்பம் ஏற்படுமா என்ற எதிர்பார்ப்பு சர்வதேச அரங்கில் நிலவுகிறது.


Next Story