ஒப்படைப்பு ஆண்டு விழாவையொட்டி ஹாங்காங்கில் போராட்டம்; வன்முறை போராட்டக்காரர்கள் மீது போலீஸ் தடியடி


ஒப்படைப்பு ஆண்டு விழாவையொட்டி ஹாங்காங்கில் போராட்டம்; வன்முறை போராட்டக்காரர்கள் மீது போலீஸ் தடியடி
x
தினத்தந்தி 2 July 2019 12:15 AM GMT (Updated: 1 July 2019 7:09 PM GMT)

ஹாங்காங்கில் ஒப்படைப்பு ஆண்டு விழாவில் போராட்டம் நடந்தது. இந்த போராட்டத்தில் வன்முறை வெடித்தது. போராட்டக்காரர்கள் மீது போலீசார் தடியடி நடத்தினர்.

ஹாங்காங்,

ஹாங்காங், இங்கிலாந்தின் காலனி நாடாக இருந்தது. 1997–ம் ஆண்டு, ஜூலை 1–ந் தேதி, சீனாவிடம் ஒப்படைக்கப்பட்டது. ஒரே நாடு, இரண்டு அமைப்புகள் என்ற வகையில் சீனாவின் நேரடி கட்டுப்பாட்டில் ஹாங்காங் உள்ளது. ஆனால் சீனாவில் உள்ள சுதந்திரம், ஹாங்காங்கில் கிடையாது. கட்டுப்பாட்டுக்கு உட்பட்ட சுதந்திரத்தைத்தான் ஹாங்காங் மக்கள் அனுபவிக்கின்றனர். அதுமட்டுமல்லாமல், நீதித்துறை சுதந்திரத்திலும் சீனாவின் தலையீடு இருக்கிறது.

இதெல்லாம் ஹாங்காங் மக்களின் மன நிலையில் கொந்தளிப்பை ஏற்படுத்தி வருகிறது. ஜனநாயக ஆதரவு உணர்வு வலுப்பெற்று வருகிறது.

இந்தநிலையில் அங்கு சமீபத்தில் கிரிமினல் கைதிகளை சீனாவுக்கு நாடு கடத்தி, அங்கு வழக்கு விசாரணையை எதிர்கொள்ள வைக்கும் வகையில் ஒரு சட்ட திருத்தம் செய்வதற்கு முடிவு செய்து, அதற்கான மசோதா சட்டசபையில் கொண்டு வரப்பட்டது. ஆனால் இது ஹாங்காங் மக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தி பெரும் போராட்டங்களுக்கு வழிவகுத்தது.

கடைசியில் ஹாங்காங் நிர்வாகம், மக்கள் போராட்டங்களுக்கு அடிபணிந்து அந்த மசோதாவை நிறுத்தி வைத்தது.

ஆனாலும் மசோதாவை முழுமையாக திரும்பப்பெறுவதோடு, ஹாங்காங் ஆட்சியாளர் கேரி லாம் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி போராட்டங்கள் தொடர்ந்து வருகின்றன.

இந்த நிலையில் ஹாங்காங், சீனாவிடம் ஒப்படைக்கப்பட்ட ஆண்டு விழா நிகழ்ச்சிக்கு நேற்று அங்குள்ள மாநாடு மற்றும் கண்காட்சி அரங்கில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. கொடியேற்று நிகழ்ச்சிக்கும் திட்டமிடப்பட்டிருந்தது.

ஆனால் ஜனநாயக ஆதரவு போராட்டக்காரர்கள் திடீரென அங்கு போராட்டத்தில் குதித்தனர். போராட்டத்தில் வன்முறை வெடித்தது.

அந்த அரங்குக்கு செல்லக்கூடிய சாலைகளில் பிளாஸ்டிக் மற்றும் உலோகத்தாலான தடுப்புகளை கொண்டு வந்து போட்டு போக்குவரத்தை முடக்கினர்.

காலை முதலே அங்கு மக்கள் கூட்டம், கூட்டமாக திரண்டு வந்தனர். போலீஸ் படையினரும் குவிந்தனர்.

போராட்டக்காரர்களில் ஒரு பிரிவினர் அங்குள்ள அரசு கட்டிடத்துக்குள் புகுந்து அங்கிருந்த தளவாட பொருட்களை அடித்து நொறுக்கினர்.  இதனால் பெரும் குழப்பமான சூழல் உருவானது.

ஒரு கட்டத்தில் போராட்டக்காரர்களுக்கும், போலீசாருக்கும் இடையே மோதல் வெடித்தது. அதைத் தொடர்ந்து போராட்டக்காரர்கள் மீது போலீசார் மிளகுப்பொடியை தூவினர். தடியடி நடத்தினர். இதனால் பதற்றம் நிலவுகிறது.

இந்த மோதலில் ஒரு பெண்ணின் மண்டை உடைந்தது. 13 போலீஸ் அதிகாரிகள் படுகாயம் அடைந்தனர். அவர்கள் மருத்துவமனைக்கு எடுத்து செல்லப்பட்டனர்.

மதிய நேரத்தில் போராட்டக்காரர்களில் ஒரு பிரிவினர் சட்டசபை கட்டிடத்துக்குள் புகுந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்ற பேரணி நடந்தது. தொடர்ந்து ஹாங்காங்கில் குழப்பமான சூழல் நிலவுகிறது.


Next Story